பல்லடம், ஜன.9: பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கள்ளிமேடு பகுதியில் வசித்து வருபவர்கள் அந்தோணிராஜ் (46). நாகராணி (43) தம்பதியினர். நாகராணி திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் உணவு இடைவேளை நேரத்தில் தன்னுடன் பணியாற்றி வரும் ராகவன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கள்ளிமேட்டு பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றார். கணபதிபாளையம் பகுதி அருகே சென்ற போது, சரக்கு லாரி மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கிய நாகராணி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயங்களுடன் இருந்த ராகவனை மீட்ட அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் நாகராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post சரக்கு லாரி மோதி பெண் டெய்லர் பலி appeared first on Dinakaran.