ஈரோடு, ஜன. 8: ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப விரைவில் பெட்ரோல் பங்க அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 250 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கொசு புகை பரப்பும் இயந்திரம், ஜெனரேட்டர் உள்ளிட்டவையும் இயக்கப்படுகின்றன. இவை அனைத்துக்கும் சேர்த்து, ஆண்டிற்கு, 15 லட்சம் லிட்டர் டீசலும், ஒரு லட்சம் லிட்டர் பெட்ரோலும் தேவைப்படுகிறது.
தற்போது, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து, மாநகராட்சி, பெட்ரோல், டீசலை மொத்தமாக கொள்முதல் செய்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள், சில்லரை விற்பனையை விட, மொத்த கொள்முதல் விற்பனையில், டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தினால், மாநகராட்சிக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்த இழப்பை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஆண்டிற்கு, மாநகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் மிச்சமாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சிக்கு தேவையான எரிபொருளை பெறும் நோக்கிலும், வருவாயை மிச்சப்படுத்தும் வகையிலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் என்ஓசி பெறுவதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post நகராட்சி சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.