திருவள்ளூர்: பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அரசு உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக பலியானார். இதில் இரவு நேரங்களில் சாலையை ஆக்கிரமிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். திருவள்ளூர் ஜெஜெ கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (52). இவர் திருப்பாச்சூர் அரசுப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாஸ்கர் தனது பைக்கில் திருவள்ளூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பாஸ்கரின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் நகர போலிசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், நெல் கொள்முதல் நிலையம் அருகே தனியார் பேருந்துகள் சாலையை ஆக்கிரமித்து இரவு நேரங்களில் நிறுத்தப்படுவதால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை. விபத்துகளை தடுக்க உடனடியாக தனியார் பேருந்துகள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.
The post பைக் மீது வாகனம் மோதி விபத்து உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப பலி appeared first on Dinakaran.