×

ஊட்டி பி1 காவல் நிலைய கட்டிடம்; குழந்தைகள் பராமரிப்பு மையமாக புதுப்பொலிவு பெறுகிறது

ஊட்டி, ஜன. 7: ஊட்டியில் உள்ள பழமை வாய்ந்த பி1 காவல் நிலைய கட்டிடம் வண்ண வண்ண ஓவியங்களுடன் குழந்தைகள் பராமரிப்பு மையமாக புதுப்பொலிவு பெறுகிறது. ஊட்டி நகரின் மத்தியில் நகர மத்திய காவல் (பி1) நிலையம் பழைமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. கடந்த 1850ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டிடம் 1860 முதல் காவல் நிலையமாக செயல்பட துவங்கியது. அக்கால கட்டத்தில் மாப்ளா ரெபல்ஸ் என்ற இயக்கத்தினர் கேரளா மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்தனர்.

அவர்கள் 1921ல் இக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் என 4 பேரை கொன்றனர். வீர மரணமடைந்த அந்த காவல்துறையினரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2005ம் ஆண்டு இந்த பழமை வாய்ந்த கட்டிடத்தை இடித்து விட்டு அப்பகுதியில் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் காவல் நிலைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், பழமை வாய்ந்த கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து கட்டிடத்தை இடிக்கும் பணி கைவிடப்பட்டு அருகில் உள்ள காலி இடத்தில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செயல்பட துவங்கியது.

பழைய காவல் நிலைய கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்றப்படும் என கூறப்பட்டதுடன், நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலம் துவங்கி தற்போதைய காலம் வரையிலான காவல்துறை சார்ந்த புகைப்படங்கள், வன உயிரின புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் கலாச்சாரம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. மாறாக புனரமைக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், இக்கட்டிடத்தில் காவலர்களின் குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது கட்டிடம் முழுவதும் வெள்ளையடிக்கப்பட்டு உட்புறம் உள்ள அறைகளின் சுவர்களில் குழந்தைகளை கவரும் வகையில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. கார்ட்டூன் கதாபாத்திரங்களான டிஸ்னி மற்றும் விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அனைத்தும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

The post ஊட்டி பி1 காவல் நிலைய கட்டிடம்; குழந்தைகள் பராமரிப்பு மையமாக புதுப்பொலிவு பெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Ooty B1 Police Station Building ,Ooty ,B1 Police Station ,City Central Police ,B1 ,Dinakaran ,
× RELATED ஊட்டி தேயிலை பூங்காவில் பொலிவுபடுத்தும் பணி துவக்கம்