பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பகுதி நேர ஆசிரியர்களின் முதன்மைக் கோரிக்கை அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான். அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

பாமக-வின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் இதுவும் சாத்தியமானது. பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது முடியாத காரியமல்ல. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.450 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும். இது 2024-25ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகையான ரூ.44 ஆயிரத்து 42 கோடியில் ஒரு விழுக்காடு மட்டும் தான். அமைப்பு சார்ந்த சிறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குக் கூட, அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவர் படிப்பு என எண்ணற்ற தகுதிகளுடன் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த உரிமைகள் எதுவும் கிடையாது. பகுதி நேர ஆசிரியர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் மிகக்குறைந்த ஊதியம் அவர்களின் குடும்பச் செலவுகளுக்கே போதாது எனும் நிலையில், பொங்கல் திருநாளைக் கொண்டாட அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவது தான் நியாயமாகும்.

ஆசிரியர்கள் கல்வி வழங்கும் கடவுள்கள். எனவே, பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கும் உடனடியாக காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க வேண்டும். அத்துடன் அவர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாட அவர்களின் ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

The post பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: