தாம்பரம்: உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கார்பன் வெளியேற்றம், காடு அழிப்பு, மக்கள் தொகை அதிகரிப்பு, பனிப்பாறை உருகுதல், கடல் நீர் மட்டம் உயர்வு உள்ளிட்ட காரணமாக வறட்சி, அடிக்கடி புயல்கள் உருவாகுதல், பலத்த மழை, அதிக அளவிலான பனிப்பொழிவு, புவி வெப்பமயமாதல் போன்றவை ஏற்பட்டு வருகிறது. மேலும், இந்த பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக பனி, குளிர் அதிகமாக உள்ள நேரங்களில் 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வாக்கிங் நிமோனியா என்ற நுரையீரல் தொற்று அதிகரித்து வருவதாக, மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் பத்மா சுஷ்மா கூறுகையில், ‘‘வாக்கிங் நிமோனியா என்பது மைக்கோ பிளாஸ்மா அல்லது கிளமிடியா போன்ற வித்தியாசமான உயிரினங்களால் ஏற்படும் நுரையீரல் தொற்று ஆகும்.
வழக்கமான நிமோனியாவை போல் இல்லாமல், வாக்கிங் நிமோனியா அதன் ஒப்பீட்டளவில் லேசான அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது. எனவே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. இதில் சளி, காய்ச்சல், தொடர்ந்து இருமல் ஆகியவை இருக்கும், வறண்ட இருமலும் ஏற்படும். வாக்கிங் நிமோனியா உள்ள நபர்கள் பொதுவாக மிகவும் தீவிரமான சுவாச நோய் தொற்றுகளுடன் தொடர்புடைய கடுமையான சோர்வை அனுபவிப்பதில்லை என்றாலும், அவர்களுக்கு லேசான காய்ச்சலுடன் சற்று உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்.
அதன் லேசான தன்மை காரணமாக, மக்கள் பெரும்பாலும் தங்கள் வழக்கமான பணிகளை தொடர்கிறார்கள். அவ்வாறு செய்யாமல், அதன் அறிகுறிகளை உன்னிப்பாக கண்காணிப்பது முக்கியம் ஆகும். இந்த நோய் பாக்டீரியாவால் ஏற்படுவதால் இதற்கு பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் கூடுதலாக, அறிகுறிகளை போக்க உதவும் பிற சிகிச்சைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.
பாராசிட்டமால் போன்ற வலி நிவாரணிகள் காய்ச்சலை குறைக்கலாம், மேலும் இருமல் மருந்துகள் தொடர்ந்து இருமலை குறைக்க உதவும். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் நெபுலைசேஷன் சிகிச்சையும் இதற்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தொற்று லேசானது என்பதாலும், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதாலும், மருத்துவமனையில் சேர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இதற்கு தேவையான மருந்துகளை எடுத்துக் கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்தாலே போதுமானதாகும்.
இதன் அறிகுறிகள் லேசாக இல்லாமல் மோசமடைந்து 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கு ஆலோசனை பெற வேண்டும். இந்த நோய் குறிப்பாக 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே அதிகம் பாதிக்கிறது. பெரியவர்களும் பாதிக்கப்படலாம் என்றாலும், சிறுவர்களுடன் ஒப்பிடுகையில் அது மிகக்குறைவாகும். இந்த தொற்று மற்றவர்களுக்கும் தொற்றக்கூடியது என்பதால், பாதிக்கப்பட்ட நபர் தும்மல், இருமல் வரும்போது அல்லது பேசும்போது கூட அவரின் நீர் துளிகள் மூலம் மற்றவர்களுக்கும் பரவும்.
இந்த நோய் பாதித்தவர்களின் கர்ச்சீப், துண்டு அல்லது தண்ணீர் பாட்டில் போன்றவற்றை எடுக்கும்போதும் அதன் மூலமும் இந்த நோய் பரவும். வாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் அறிகுறிகள் லேசானதாக இருக்கும் காரணத்தால் அவர்கள் பொது இடங்களுக்கு வரும் போது, அதாவது பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களுக்கு வரும்போது அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவக்கூடும். மேலும் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் முக்கியம்.
அவ்வாறு பரவாமல் தடுப்பதற்கு, அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள், குறிப்பாக ஒருவருக்கு இருமல் இருக்கும் போது முகக்கவசம் அணிந்து செல்லுதல், பாதிக்கப்பட்ட நபர்கள் பள்ளி அல்லது பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு நோய் குணமாகும் வரை ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீரக்கொண்டு நன்றாக கைகளை கழுவ வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும்.
இது ஆபத்தான நோயில்லை இருப்பினும் அறிகுறிகளை கண்டறிந்து, அவை மோசமடைந்தாலோ அல்லது தொடர்ந்தாலோ மருத்துவ ஆலோசனையை பெறுவது முக்கியம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தகுந்த கவனிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் பிரவலிகா கூறுகையில், ‘‘நிமோனியா என்பது நுரையீரல் திசுக்களில் ஏற்படும் ஒருவித தொற்று ஆகும். இதற்கு மேம்பட்ட சிகிச்சைகள் தற்போது உள்ளபோதிலும் குறிப்பிடத்தக்க நோயுற்ற தன்மை மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு சவால்களை நாம் இன்னும் சந்தித்து வருகிறோம். நிமோனியா எதன் மூலம் ஏற்படுகிறது என்பதற்கான பல காரணங்கள் உள்ளது.
இருந்தபோதிலும் தற்போது வரும் நிமோனியாவை பொறுத்தவரை அது நுண்ணுயிரிகளின் பொதுவான குழு மற்றும் வித்தியாசமான குழு மூலம் ஏற்படுகிறது. வித்தியாசமான நிமோனியா என்பது வாக்கிங் நிமோனியா என்றும் அழைக்கப்படுகிறது. இது வழக்கமான பாக்டீரியா, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா, எச் இன்ப்ளூயன்ஸா போன்றவற்றால் ஏற்படாத ஒரு வகை நிமோனியாவாகும்.
இதன் அறிகுறிகளை பொறுத்தவரை சளி, காய்ச்சல் மற்றும் முக்கியமாக தொடர்ந்து இருமல் ஆகியவை, வறண்ட இருமல், உடல் சோர்வு, தலைவலி ஏற்படுத்துதல் போன்றவை ஆகும். சிலருக்கு தசை வலியும், கடுமையான நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படலாம். நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் ஆகும்,’’ என்றார்.
* கவனமாக இருக்க வேண்டியவர்கள்
2 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், ஏற்கனவே ஆஸ்துமா அல்லது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள், சிறுநீரக நோய்கள் அல்லது தன்னுடல் தாக்க நிலைகள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் அல்லது புற்றுநோய் போன்ற பிற நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இத்தகைய அதிக ஆபத்து உள்ள நபர்களுக்கு மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தெரிந்தாலும் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது என்பது சிறந்த வழியாகும். மருத்துவர் உடல் பரிசோதனை உட்பட ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனை மற்றும் மார்பு எக்ஸ்ரே பரிசோதனைக்கும் பரிந்துரை செய்யலாம். நோய்த்தொற்றின் தீவிரத்தை அறிய ரத்த பரிசோதனையும் செய்யப்படும். இந்த பரிசோதனைக்கு பிறகு உடனடியாக சிகிச்சை செய்யப்படும்.
* முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பொதுவாக சாதாரண நிலையில் இருக்கும்போது அதற்கு போதிய ஓய்வும், உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முற்றிய நிலையாக இருந்தால் சுவாச பாதிப்பு ஏற்படலாம். இதற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டும். ரத்த ஓட்டத்தில் பரவினால் செப்சிஸ் ஏற்படலாம். குறிப்பாக இதயத்தில் பிரச்னை உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
வந்தபின் குணப்படுத்துவது என்பதைவிட இந்த நோய் வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது என்பது சிறந்த ஒன்றாகும். இதற்கான தடுப்பூசி போட்டுக் கொண்டால் இந்த நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இதேபோல் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், இந்த நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தாமை போன்றவற்றை கடைபிடிக்கும்போது வாக்கிங் நிமோனியோ வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
நிமோனியா வகைகள்
* மைக்கோப்ளாஸ்மா நிமோனியா: இது குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படுகிறது.
* கிளமிடோபிலா நிமோனியா: இது பெரும்பாலும் பெரியவர்களை பாதிக்கிறது.
* லெஜியோனெல்லா நிமோனியா: குறிப்பாக பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
* இன்ப்ளூயன்ஸா வைரஸ்: இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் அடிப்படை நோய் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது.
* பூஞ்சை தொற்றுகள்: நிமோசைஸ்டிஸ் ஜிரோவெசி போன்றவை, பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது.
The post பனிப்பொழிவு சீசனில் சிறுவர்களை பாதிக்கும் நுரையீரல் தொற்று: சிகிச்சை வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் appeared first on Dinakaran.