சென்னை: சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசமடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. இதனால் சில இடங்களில் மிதமான மழை பெய்தாலும், பருவமழை நிறைவையொட்டி குளிர்காலம் தொடங்கி இருக்கிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் பனிமூட்டமும் நிலவி வருகிறது.
இது, குளிர்ந்த தன்மையை அதிகரித்துள்ளது. காற்றில் ஈரப்பதத்தின் அளவும் அதிகரித்துள்ளது. வானிலை சுழற்சிகள் காரணமாக விடிந்த பின்னரும் காற்று மேலெழும்பி செல்ல இயலாமல், ஈரப்பத தன்மை காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் காற்று மாசு என்பது கடுமையாக அதிகரித்து இருக்கிறது. சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதியை பொறுத்தமட்டில், காற்று மாசு அளவு 36 புள்ளிகள் இருந்தது.
அதே வேளையில், நேற்று முன்தினம் ஒட்டுமொத்த சென்னையின் காற்று மாசு தரக்குறியீடு 177 என்ற அளவுக்கும், சென்னை மணலியில் அதிகபட்ஷமாக 213 தரக்குறியீடு அளவுக்கும் சென்றுள்ளது. இதனால் காற்று சுவாசிக்க தகுதி அற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலாங்கரை 180, வேளச்சேரியில் 162, ஆலந்தூரில் மிதமான அளவை குறிக்கும் 112 தரக்குறியீடு அளவில் காற்று மாசு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி சென்னையில் அபிராமிபுரத்தில் 193 புள்ளிகள், அச்சுதன் நகரில் 151 புள்ளிகள், அந்தோணி பிள்ளை நகரில் 201 புள்ளிகள், அரும்பாக்கத்தில் 181 புள்ளிகள், எண்ணூரில் 116 புள்ளிகள், ஐஎன்டியுசி நகரில் 177 புள்ளிகள், கொடுங்கையூரில் 221 புள்ளிகள், கொரட்டூரில் 152 புள்ளிகள், குமாரசாமி நகரில் 187 புள்ளிகள், ராயபுரத்தில் 205 புள்ளிகள், பெருங்குடியில் 187 புள்ளிகள், பொத்தேரியில் 167 புள்ளிகள், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பகுதியில் 164 புள்ளிகள் என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்து இருக்கிறது, என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, இதய நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசு அதிகரிக்கப்பட்டது. அப்போது சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியது. அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
The post கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல் appeared first on Dinakaran.