உளுந்தூர்பேட்டை, ஜன. 3: உளுந்தூர்பேட்டை அருகே நகைக்கடையில் போலி நகையை அடமானம் வைத்து நூதனமாக பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (40). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் பகுதியில் சொந்தமாக நகைக் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவரது கடைக்குவந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் 12 கிராம் தங்கச் செயினை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் வாங்கிச் சென்றுள்ளார். அவர் சென்றபிறகு அந்த நகையை உரிய சோதனை செய்தபோது அந்த செயின் தங்க முலாம் பூசப்பட்ட செப்பு செயின் என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் ஜெயச்சந்திரன் அடகு வைத்த பெண்ணின் முகவரியை தொடர்பு கொண்டபோது அவர் கொடுத்தது போலி முகவரி என்பது தெரியவரவே, நூதன மோசடி தொடர்பாக திருநாவலூர் காவல் நிலையத்தில் உடனே புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து போலி நகையை வைத்து ரூ.60 ஆயிரத்தை மோசடி செய்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post உளுந்தூர்பேட்டை அருகே போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் மோசடி: பெண்ணுக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.