×

ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கருப்பு கொடியுடன் கிராம மக்கள் போராட்டம்: அதிகாரிகள் சமரசம்

பெரியபாளையம்: சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சி அருகே அமைந்துள்ள ஆரணியை பேரூராட்சியுடன் இணைக்க நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து மல்லியன்குப்பம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் காரணமாக புதுவாயல் – பெரியபாளையம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி சாந்தி, பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு, சாலையோரத்தில் அமர்ந்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது கிராம ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதால், 100 நாள் வேலை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் உள்ள நிலையில் நகரமயமாதலால் பாதிப்புகள் அதிகரிக்கும் எனவும் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் பிடிஓ மாணிக்கத்திடம், தங்களது ஊரட்சியை தங்களது கிராம சபை ஒப்புதல் இல்லாமல் பேரூராட்சியுடன் எப்படி இணைக்கலாம் எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சோழவரம் பிடிஓ மாணிக்கம் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்குமாறும், அதனை மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குனர் உள்ளிட்டோரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாத பட்சத்தில் வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைத்தல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

The post ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கருப்பு கொடியுடன் கிராம மக்கள் போராட்டம்: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : government ,Periypalayam ,Arani ,Malliyankuppam ,Cholavaram Block Development Office ,city government ,Dinakaran ,
× RELATED ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின்...