சென்னை: மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன்சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது முழு உருவபடங்களை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் வரும் 7ம்தேதி காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 26ம்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோன்று, தமிழக அரசியல் களத்தில் எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய தைரியமான தலைவராக விளங்கி வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 75 வயதில் உயிரிழந்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரது மறைவையொட்டி அவர்களது படத்திறப்பு விழாவுக்கு தமிழக காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, வரும் 7ம்தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் அவர்களது முழு உருவ படத் திறப்பு விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகிக்கிறார். இந்த விழாவில், மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்ேகாவன் ஆகியோரது முழு உருவபடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜோய் குமார், சூரஜ் ஹெக்டே மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
The post மறைந்த தலைவர்கள் மன்மோகன்சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் பட திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.