பாமகவில் தந்தை-மகன் மோதல் முற்றுகிறது; பேரன் முகுந்தன் தான் இளைஞர் அணி தலைவர்: ராமதாஸ் திட்டவட்ட அறிவிப்பு

திண்டிவனம்: பாமக இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான். இதில் எந்த மாற்றமும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால், அவருக்கும் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் தீரவில்லை என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. பாமகவின் இளைஞர் சங்க மாநில செயலாளராக இருந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பிறகு அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த 28ம் ேததி நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், மகள் வழி பேரன் முகுந்தனை கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அப்போது மேடையில் இருந்த அன்புமணி, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு பதவி வழங்குவீர்கள். கட்சியில் சேர்ந்தவுடன் பதவி வழங்குவீர்களா என்றெல்லாம் கேள்வி கேட்டவர், திடீரென மைக்கை மேஜை மீது கோபமாக போட்டார்.

அப்போது ராமதாஸ் இது என்னுடைய கட்சி. நான் தொடங்கி, வளர்த்த கட்சி. விருப்பம் இருந்தால் கட்சியில் இருங்கள். இல்லாவிட்டால் போகலாம் என்றெல்லாம் தெரிவித்தார். இதையடுத்து கோபமாக புறப்பட்டுச் சென்ற அன்புமணி, பனையூரில் எனக்கு அலுவலகம் இருக்கிறது. அங்கு வந்து தொண்டர்கள் என்னை சந்திக்கலாம் என்று கூறிவிட்டுச் சென்றார். இதனால் பனையூரா? தைலாபுரமா? என கட்சிக்குள் கடும் புகைச்சல் எழுந்தது. இந்தநிலையில் கட்சியில் தனக்கு பொறுப்பு வேண்டாம் என்று இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. தந்தை மகன் மோதலால் கட்சியில் இருக்கும் நிர்வாகிகளும், கொஞ்ச நஞ்ச தொண்டர்களும் தலையைப் பிய்த்துக் கொண்டனர். யார் தலைமையின் கீழ் ெசயல்படுவது என்பது தெரியாமல் குழம்பி தவித்தனர்.

அடுத்தநாள் தைலாபுரத்தில் தந்தை ராமதாசை சந்தித்துப் பேசிவிட்டு வந்த அன்புமணி, ‘‘எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி, காரசாரமான விவாதங்கள் இருக்கும். இது உட்கட்சி பிரச்னை. இதை நாங்கள் பார்த்துக்கொள்வோம். அரசியலில் இதெல்லாம் சகஜம்பா’’ என்பது போல் பேட்டியளித்துவிட்டுச் சென்றார். முகுந்தன் நியமனத்தை ரத்து செய்வதற்கு ராமதாஸ் ஒப்புக் கொண்ட பிறகே அவரை அன்புமணி சந்தித்தார் என்று அப்போது கூறப்பட்டது. இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கடந்த 28ம்தேதி பாமக பொதுக்குழுவில் அன்புமணியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து கேட்டபோது, பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி பிரச்னை, அன்புமணி அவரது கருத்தை தெரிவித்தார். பின்னர் இருவரும் பேசி சமரசம் செய்யப்பட்டு விட்டது என்றார்.

தொடர்ந்து பாமக இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் (மகள் வயிற்றுப்பேரன்) தொடர்வாரா? என்ற கேள்விக்கு, பொதுக்குழுவில் இது அறிவிக்கப்பட்டது, அடுத்த நாளே அதற்கான நியமன ஆணையை அவரிடம் வழங்கி விட்டேன், அவர் இளைஞர் சங்க தலைவராக தொடர்வாரா? என்ற கேள்விக்கே இடமில்லை, அவர்தான் இளைஞர் சங்க தலைவர் என்றார். ேமலும் அவர் கூறும்போது, ‘‘பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது, இதனால் அரசு பள்ளிகளின் தரம் குறைத்து மதிப்பிடப்படும். டாஸ்மாக் சந்து கடைகளை மூட வேண்டும். இல்லை என்றால் பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும்’’ என்றார்.

The post பாமகவில் தந்தை-மகன் மோதல் முற்றுகிறது; பேரன் முகுந்தன் தான் இளைஞர் அணி தலைவர்: ராமதாஸ் திட்டவட்ட அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: