புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு வரும் நன்கொடை 2022-23ம் நிதியாண்டில் ரூ.912 கோடியாக சரிந்ததாக அறிக்கை வெளியாகி உள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கவும், வென்டிலேட்டர்கள் வாங்கவும் பிஎம் கேர்ஸ் நிதியத்தை பிரதமர் மோடி கடந்த 2020 மார்ச்சில் தொடங்கி வைத்தார். இது பொது அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. இந்த நிதியத்தின் தலைவராக பிரதமர் மோடி இருந்தாலும் இதற்கும் ஒன்றிய அரசுக்கும் சம்மந்தமில்லை, முழுக்க முழுக்க தனியாரிடம் இருந்து நிதி வசூலித்து தொற்றுநோய் பேரிடர் கால இடர்பாடுகளுக்கு செலவழிப்பதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், பிஎம் கேர்சின் 2022-23ம் நிதியாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் ரூ.912 கோடி மட்டுமே நன்கொடையாக கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்ட 2020-21ம் ஆண்டில் ரூ.7,184 கோடி நன்கொடை கிடைக்கப்பெற்றது. 2021-22ல் ரூ.1,938 கோடியாக குறைந்தது. அடுத்ததாக ரூ.1000 கோடிக்கும் கீழ் நன்கொடை குறைந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டு வரையிலான கணக்கு விவரங்கள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக வெளிநாட்டு நன்கொடை பெரிதும் குறைந்துள்ளது. 2020-21ல் ரூ.495 கோடி கிடைக்கப்பெற்ற நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் முறையே ரூ.40 கோடி, ரூ.2.5 கோடி மட்டுமே வந்துள்ளது. இந்த நிதியத்திலிருந்து 2022-23ல் செலவழிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.439 கோடி. அதில் கொரோனாவால் பெற்றோரை அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் சில்ட்ரன் திட்டத்திற்கு ரூ.346 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டின் முடிவில் நிதியத்தின் இருப்பு ரூ.6,283 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post 2022-23ம் நிதியாண்டில் பிஎம் கேர்ஸ் நன்கொடை ரூ.912 கோடியாக சரிந்தது: ரூ.6,283 கோடி நிதி இருப்பு appeared first on Dinakaran.