×

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமையும் இடத்தில் இறுதிச்சடங்கை அனுமதிக்க முடியாது: காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை நிராகரிப்பு


* ஒன்றிய பாஜக அரசுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைக்கும் இடத்தில் இறுதிச்சடங்கு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசிடம், காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அது மோதலாக வெடித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு காலமானார். டெல்லியில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங்கின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. இந்த தகவலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்றிரவு அறிவித்தது. அதில், ‘டெல்லியில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும்’ என்று அறிவித்துள்ளது. முன்னதாக மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திற்கும், நினைவிடத்திற்கும் சரியான இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி போன்ற தலைவர்கள் கோரினர்.

மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கான இடம் ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், ‘நினைவிடம் அமைப்பதற்காக தனியாக ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும். அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். அதனால் அவரது இறுதி சடங்குகள் மற்றும் பிற சம்பிரதாயங்கள் முடிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ‘முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் யாவும் அவரது பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் அமைக்கப்படும் நினைவுச்சின்னம் கட்டப்படக்கூடிய இடத்தில் நடத்தப்பட வேண்டும்’ என்று கோரினார்.

மேலும் மற்றொரு பதிவில், ‘மன்மோகன் சிங்கின் உலகளாவிய அந்தஸ்து, சிறந்த சாதனைகள், தேசத்திற்காக ஆற்றிய அவரது சேவை ஆகியவற்றிற்கு ஏற்ப அவரது இறுதி சடங்குகள் மற்றும் நினைவிடத்திற்கான இடத்தை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான தாமதங்கள் ஏன்? இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் மன்மோகன் சிங்கை வேண்டுமென்றே அவமதிப்பதாகும்’ என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் முடிவானது அதிர்ச்சியாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது. மன்மோகன் சிங்கின் நினைவாக வரலாற்று நினைவுச்சின்னம் கட்டப்படக்கூடிய இடத்தில் அவரது உடலை தகனம் செய்ய வேண்டும்’ என்ற மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அந்த இடம் ராஜ்காட்டாக இருக்க
வேண்டும்.

கடந்த காலத்தில் பெரும் தலைவர்களுக்கு பின்பற்றப்பட்ட பாரம்பரியத்தை மன்ேமாகன் சிங்கிற்கும் பின்பற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார். ேமலும் மற்றொரு பதிவில், ‘சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு ஏன் இவ்வளவு அவமரியாதை ஒன்றிய அரசு காட்டுகிறது என்பது புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போதைக்கு, நிகம்போத் காட் பகுதியில் இறுதி சடங்குகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகளாவிய அந்தஸ்தை பெற்ற தலைவருக்கு ஒன்றிய அரசு அவமதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசின் சார்பில் நினைவிடத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும், அது டெல்லியிலா? அல்லது வேறு இடத்திலா? என்ற சந்தேகங்கள் எழுந்தன.

ஆனால் மன்மோகன் சிங்கின் நினைவிடத்தை டெல்லியில் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்கி வருவதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவுச்சின்னம் அமைக்கும் முடிவு குறித்து காங்கிரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் நினைவுச்சின்னத்தைக் கட்டுவதற்கு சரியான இடத்தைக் கண்டுபிடிக்க சில நாட்கள் ஆகும் என்றும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் அமைதியாக நடத்தி முடிப்பதற்கு முன்பாக நினைவிடம், இறுதிச்சடங்கு போன்ற விசயங்கள் தொடர்பாக ஒன்றிய பாஜக அரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் ஊடகங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.

பிரணாப் மகள் வருத்தம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் ஒதுக்கும்படி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதினார். இவ்விவகாரம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா, மேற்கண்ட விசயம் குறித்து வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2020ம் ஆண்டில் எனது தந்தை (பிரணாப் முகர்ஜி) காலமானபோது, காங்கிரஸ் தலைமை எந்த இரங்கல் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யவில்லை; காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தை கூட கூட்டவில்லை.

இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைமை என்னை தவறாக வழிநடத்தியது. முன்னாள் குடியரசுத் தலைவருக்கு இரங்கல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யவில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார். ஆனால் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் காலமானபோது, காங்கிரஸ் செயற்குழுவின் கூட்டம் கூட்டப்பட்டதாகவும், இரங்கல் செய்தியை எனது தந்தையே தயாரித்ததாகவும் அவரது நாட்குறிப்பில் படித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமையும் இடத்தில் இறுதிச்சடங்கை அனுமதிக்க முடியாது: காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,Congress ,BJP ,New Delhi ,Ceremony ,Dinakaran ,
× RELATED மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...