×

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

*வனத்துறையினர் தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள், யானைகள், கரடிகள், காட்டுநாய்கள், ஓநாய்கள், காட்டு எருமைகள் மற்றும் பெரிய அளவிலான மலைப் பாம்புகள், ராஜநாகங்கள் என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க வகையில் மாநில விலங்கான வரையாடுகளும் வசித்து வருகின்றன. மலை உச்சியில் வசித்து வரும் வரையாடுகளின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘புலிகள் காப்பகத்தின் அடிவார பகுதிகளிலேயே பெரும்பாலான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆனால் வரையாடுகள் மட்டும் மலை உச்சி பகுதியில், குறிப்பாக பேய் மழை மொட்டை பகுதியில் அதிகளவு வசித்து வருகின்றன.

வனவிலங்குகளின் எண்ணிக்கையை கண்காணிக்க பொருத்தப்பட்ட கேமராவில் முன்பெல்லாம் அதிக அளவு சிக்காத வரையாடுகள், இப்போது கணிசமாக பதிவாகியுள்ளன. மலை உச்சி பகுதிக்கு செல்லும் போது வரையாடுகள் சிறு சிறு கூட்டங்களாக இருப்பதை காண முடிகிறது.

இதற்கு முன் அரிதாக பார்க்க கூடிய வரையாடுகள் இப்போது மலை உச்சி பகுதியில் பரவலாக தென்படுகிறது. இதனால் இதன் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வரையாடுகளுக்கு தேவையான உணவு, நீர் தாராளமாக கிடைப்பதும், வனத்துறையினரின் கண்காணிப்பு காரணமாக வேட்டை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதும் அவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதற்கு காரணமாகும்’’ என தெரிவித்தனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur Meghamalai ,Tiger Reserve ,Forest Department ,Srivilliputhur ,Meghamalai Tiger Reserve ,Meghamalai ,Western Ghats ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல அனுமதி