பெரியபாளையம், டிச.28: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே, ஆரணி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் பிரதாப்(30). இவருக்கு திருமணமாகி 2 மாத கைக்குழந்தை உட்பட 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை வழக்கம்போல் பிரதாப் ஆரணி பேரூராட்சியில் குப்பை கழிவுகளை சேகரித்துக் கொண்டு வாகனத்தில் ஏற்றி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டச் சென்றார். வாகனத்தின் மேலிருந்து குப்பைகளை கொட்ட முயன்ற போது, மேலே சென்ற மின்கம்பியில் தவறுதலாக உரசியதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக பிரதாப்பை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பிரதாப் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பிரதாப் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம் ஆரணி பேரூராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஆரணி பேரூரில் குப்பை கொட்டிய போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.