×

தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வீட்டுமனை பட்டா கேட்டு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை, டிச. 28: பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், கடந்த வருடம் அமணம்பாக்கம், அணைக்கட்டு மறுமலர்ச்சி நகர், கொமக்கன் பேடு, இந்திரா நகர், மாகரல் மேட்டு காலணி போன்ற பகுதிகளில் வசித்து வந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனுக்கள் கொடுத்தனர். இதில், 150 குடும்பங்களுக்கு அப்போது பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது ஆய்வு செய்து பட்டா வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே, விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மேலும் சிலருக்கு புதிதாக பட்டா கொடுக்க வலியுறுத்தியும் நேற்று தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் பழனி தலைமை தாங்கினார். நிர்வாகிகள், ஏ.ஜி கண்ணன், விஸ்வநாதன், கங்காதரன், தேவேந்திரன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்ட துணைச்செயலாளர் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அப்போது, தகவலறிந்து வந்த திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் பட்டா கேட்டு மனுக்கள் கொடுத்தனர்.

The post தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வீட்டுமனை பட்டா கேட்டு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers' Association ,Thamaraipakkam Joint Road ,Uthukottai ,Periypalayam ,Amanambakkam ,Anicuttu Marumalarchi Nagar ,Komakkan Pedu ,Indira Nagar ,Magaral Mettu Kalani ,
× RELATED வேளாண் கடன் உச்சவரம்பு உயர்வு ஏமாற்று வேலை: விவசாயிகள் சங்கம் கண்டனம்