- மன்மோகன் சிங்
- காங்கிரஸ்
- ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
- 2004 மக்களவைத் தேர்தல்
- ஜனாதிபதி
- சோனியா காந்தி
- இந்தியா
- முன்னாள்
- அமைச்சர்…
2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென யாரும் எதிர்பார்க்காத முடிவாக மன்மோகன்சிங் பிரதமராக தேர்வானார். முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் இதுபற்றி தனது புத்தகத்தில்,’ சோனியாவிடம் பேசிய ராகுல் காந்தி, நீங்கள் பிரதமர் ஆக வேண்டிய அவசியமில்லை. என் தந்தை கொலை செய்யப்பட்டார். எனவே இந்த விவகாரத்தில் எனக்கு 24 மணி நேரத்தில் பதில் வேண்டும். நீங்கள் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதைத் தடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று ராகுல் காந்தி கூறினார்’ என்று எழுதியுள்ளார்.
இதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி இருந்தனர். ஆனால் மன்மோகன்சிங்கை புதிய பிரதமராக சோனியாகாந்தி தேர்வு செய்தார். ‘தி பிஎம் இந்தியா நெவர் ஹேட்’ என்ற தலைப்பில், பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா எழுதிய புத்தகத்தில், ‘ பிரதமர் பதவிக்கான போட்டியில் எனது தந்தை இருப்பதை அறிந்து தொலைபேசியில் பேசினேன். நீங்கள் பிரதமராகப் போகிறாரா? என்று அவரிடம் கேட்டேன். ‘இல்லை, அவர் (சோனியா) என்னை பிரதமராக்க மாட்டார்’ என்று என் தந்தை சுருக்கமாக பதிலளித்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* ஒரே போன் காலில் நிதியமைச்சர் டூ பிரதமர் வரை…
ரிசர்வ் வங்கி கவர்னர், திட்டக்குழு துணைத்தலைவர் உள்பட ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய மன்மோகன்சிங் அரசியல் பக்கம் திரும்பியது மிகவும் அதிசயமான சம்பவம். அதுவும் ஒரு தொலைபேசி அழைப்பு அவரது வாழ்க்கையையே மாற்றி போட்டது. கடந்த 1991ம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு மன்மோகன் சிங் டெல்லிக்குத் திரும்பியிருந்தார். அன்று இரவு, மன்மோகன்சிங்கின் வீட்டிற்கு போன் அழைப்பு வந்தது. அந்த போனை மன்மோகன் சிங்கின் மருமகன் விஜய் தங்கா எடுத்தார்.
எதிர்முனையில், அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவின் நம்பிக்கைக்குரிய நபரான பி.சி.அலெக்சாண்டர் பேசினார். தனது மாமனார் தூங்கிக் கொண்டிருப்பதாக மருமகன் கூறினார். அவரை எழுப்பும்படி அலெக்சாண்டர் வற்புறுத்தினார். அடுத்த சில மணிநேரங்களுக்கு பிறகு மன்மோகன் சிங்கும் அலெக்சாண்டரும் சந்தித்தனர். சந்திப்பில், அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தனது அமைச்சரவையில் நிதி அமைச்சர் பதவியை மன்மோகன் சிங்கிற்கு அளிக்க இருந்த விருப்பத்தை அலெக்சாண்டர் தெரிவித்தார். ஆனால், அப்போது யுஜிசி தலைவராக இருந்த மன்மோகன் சிங், அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. அலெக்சாண்டர் சொன்னதையும் மன்மோகன் சிங் நம்பவில்லை.
மறுநாள் ஜூன் 21 அன்று, வழக்கம் போல யுஜிசி அலுவலகத்துக்கு பணிக்குச் சென்றார். இம்முறை நேரடியாக பிரதமர் பி.வி.நரசிம்மராவிடம் இருந்தே, மன்மோகன் சிங்கிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது போனில் பேசிய நரசிம்ம ராவ், ‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்.. அலெக்சாண்டர் எதுவும் கூறவில்லையா?’ என்று கேட்டார். அதற்கு, மன்மோகன் சிங், ‘அலெக்சாண்டர் பேசினார். ஆனால் நான் அவரை நம்பவில்லை’ என்று பதில் அளித்தார். யுஜிசி அலுவலகத்தில் இருந்துபோது உடனடியாக ஆடைகளை மாற்றிக்கொண்டு பதவியேற்பு விழாவிற்கு வரும்படி அவரை நரசிம்மராவ் அழைத்தார். இதையடுத்து மன்மோகன்சிங் அங்கு சென்றார். பதவிப் பிரமாண வரிசையில் மன்மோகனும் இடம் பெற்று இருப்பதை பார்த்து அனைவருக்கும் ஆச்சர்யம். அன்று நிதியமைச்சரானவர் 2004ல் நாட்டின் பிரதமர் பதவிக்கு உயர்ந்தார்.
* 33 ஆண்டுகள் எம்பியாக இருந்த மன்மோகன்சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மாநிலங்களவையில் 6 முறை எம்.பி.யாக இருந்தார். அவர் மொத்தம் 33 ஆண்டுகள் எம்பியாக இருந்துள்ளார். அசாம் மாநிலத்தில் இருந்து 1991ல் தேர்வு செய்யப்பட்ட அவர், 1995, 2001, 2007, 2013ல் தொடர்ந்து அசாம் மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 2019ல் மீண்டும் மாநிலங்களவையின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 13ல் ஓய்வு பெற்றார். அந்த இடத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி தற்போது மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* 2024 மக்களவை தேர்தலில் மோடியை கடுமையாக விமர்சித்த மன்மோகன்சிங்
2024 மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோடிக்கு எதிராக மன்மோகன்சிங் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். உடல்நலம் குன்றியிருந்த போது பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 1ம் தேதி 7ம் கட்டமாக ஓட்டுப்பதிவுக்கு முன்பு அக்னிபாத் உள்ளிட்ட திட்டங்களை விமர்சனம் செய்து மன்மோகன்சிங் அறிக்கை வெளியிட்டார். மே 30ல் அவர்வெளியிட்ட அறிக்கையில்,’ இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அரசியல் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். முற்றிலும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலான மிக மோசமான வெறுப்பு பேச்சுகளில் மோடி ஈடுபட்டுள்ளார். மேடைப்பேச்சின் கண்ணியத்தையும், அதன் மூலம் பிரதமரின் பதவியின் மதிப்பையும் குறைத்த முதல் பிரதமர் மோடிதான்’ என்று அவர் விமர்சனம் செய்து இருந்தார்.
* மன்மோகன்சிங்கின் கடைசி பேட்டி
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 2019 மே 5ம் தேதி கடைசியாக பேட்டி அளித்தார். அப்போது பொருளாதார கொள்கைகளில் நீதிமன்றங்களில் வரும் குறுக்கீடு குறித்து கவலை தெரிவித்தார். மேலும் மோடி தலைமையிலான அரசுக்கு நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி சரியான புரிதல் இல்லாததால், பணமதிப்பிழப்பு போன்ற சீர்குலைக்கும் முடிவுகளுக்கு வழிவகுத்தது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் சோர்ந்து போயுள்ளனர் என்று கூறிய மன்மோகன்சிங், தான் எப்போதும் பொறுப்புக்கூறலை வரவேற்பதாக குறிப்பிட்டார். அதுவே ஜனநாயகத்தின் உள்ளார்ந்த அம்சம் என்று தெரிவித்தார்.
* வரலாறு என்னை கருணையுடன் நடத்தும் வைரலாகும் மன்மோகன்சிங் பேட்டி
கடந்த 2004 – 2014ம் ஆண்டு வரை இரண்டு முறை முழுமையாக 10 ஆண்டுகளுக்கு மன்மோகன் சிங் நாட்டின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமராக பதவி வகித்த பத்தாண்டு காலக்கட்டத்தில் பல முறை பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி அத்தனை விதமான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறார். அப்படி 2014ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி நடந்த கடைசி பத்திரிகையாளர் சந்திப்பில், ‘சமகால ஊடகங்களை விட வரலாறு என்னை கருணையோடு நடத்தும். நான் செய்தவை என்ன செய்யாதவை என்ன என்பதை வரலாறே தீர்மானித்துக் கொள்ளும். நான் பலவீனமான பிரதமர் என்பதை நான் நம்பவில்லை’ என பேசியது இப்போது வைரலாகி வருகிறது.
* நாட்டையே புரட்டிப்போட்ட மன்மோகன்சிங் பட்ஜெட்
இன்று இந்திய பொருளாதாரம் உலக தரத்திற்கு மாறியிருக்கிறது. இந்தியர்களின் வாழ்க்கை முறை உலக தரத்திற்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் மன்மோகன்சிங்தான். 1991ல் அவர் தாக்கல் செய்த பட்ஜெட் தான் இன்று இந்தியாவின் முகத்தையே உலக அளவில் மாற்றியிருக்கிறது. இதற்கு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. குறிப்பாக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, உரம் விலை உயர்வை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
ஆனால் தனது சீர்திருத்த கொள்கைகளில் மன்மோகன்சிங் உறுதியாக நின்றார். காங். எம்பிக்களில் மணிசங்கர் அய்யர், நாதுராம் மிர்தா ஆகியோர் மட்டுமே மன்மோகன் பட்ெஜட்டை ஆதரித்தனர். ஆனால் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் மன்மோகன்சிங்கிற்கு பிரதமர் நரசிம்மராவ் உறுதியாக ஒத்துழைத்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, 1991 ஜூலை 25 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு அடங்கவில்லை.
குழப்பத்தை தீர்க்க 1991 ஆகஸ்ட் 1 அன்று காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் கூட்டுக்குழு கூட்டத்தை கூட்டிய நரசிம்மராவ், பட்ஜெட் பற்றி விளக்கத்தை அளிக்க மன்மோகன்சிங்கை பேச உத்தரவிட்டார். ஆகஸ்ட் 2, 3ம் தேதிகளிலும் இந்த கூட்டம் தொடர்ந்தது. இறுதியில் கட்சியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, உர விலையில் 40 சதவீத உயர்வை 30 சதவீதமாகக் குறைக்க மன்மோகன்சிங் ஒப்புக்கொண்டார். ஆனால் கியாஸ் மற்றும் பெட்ரோல் விலை உயர்வில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த பட்ஜெட் தான் பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளுக்கும், இந்திய தொழில் வளத்திற்கும் முக்கிய ஆதாரமாக திகழ்ந்து நாட்டின் வளர்ச்சியை மாற்றி அமைத்தது.
* சிறந்த அரசியல்வாதி, புகழ்பெற்ற தலைவர் ஒன்றிய அமைச்சரவை பாராட்டு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்ததற்கு ஒன்றிய அமைச்சரவை இரங்கல் தெரிவித்தது. மேலும் அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் தேசிய வாழ்க்கையில் ஒரு முத்திரையை பதித்த புகழ்பெற்ற தலைவர் என்று பாராட்டியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைச்சரவை இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியதுடன், இரங்கல் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில்,’ மன்மோகன் சிங் நமது தேசிய வாழ்வில் தனது முத்திரையை பதித்துள்ளார். அவரது மறைவால் நாடு ஒரு சிறந்த அரசியல்வாதி, புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஒன்றிய அரசு சார்பிலும், ஒட்டுமொத்த தேசத்தின் சார்பிலும் அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.
The post மன்மோகன் பிரதமரானது எப்படி? appeared first on Dinakaran.