மும்பை: ஊசி போட்டுக் கொள்வது என்றாலே பலருக்கு அலர்ஜி; பயம். இதனால் பலர் தடுப்பூசி போடாமல் விட்டு விடுகின்றனர். சில நோய்களுக்கு ஊசி மருந்துதான் உடனடி பலன் அளிக்கக் கூடியது. ஆனால், ஊசிக்கு பயப்படும் நோயாளிகள் மருத்துவர்களிடம் மாத்திரைகளை மட்டுமே எழுதித்தருமாறு வலியுறுத்துகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மும்பை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் வீரன் மெனேசஸ் தலைமையிலான குழுவினர் தீர்வு கண்டுள்ளனர். அதிர்வலைகள் மூலம் ஊசி மருந்து செலுத்தும் முறைதான் அது. உயிர் மருத்துவ கருவிகள் மற்றும் சாதனங்கள் என்ற இதழில் கடந்த செப்டம்பர் மாதம் ஐஐடி குழுவினரின் ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.
அதிர்வலைகள் ஒலியை விட அதிக வேகத்தில் செல்லக்கூடியவை. இதன் மூலம் செலுத்தப்படும் திரவ மருந்து, மைக்ரோ ஜெட் போல செயல்பட்டு ஒலியை விட அதிக வேகத்தில் தசையில் ஊடுருவும். இதனால், நோயாளி உணரும் முன்னரே மருந்து அவரது உடலுக்குள் சென்று விடும் என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரியங்கா ஹன்கரே என்ற ஆய்வு மாணவர் இது குறித்துக் கூறுகையில், ‘‘ இரண்டரை ஆண்டுகள் ஆய்வுக்கு பின்னர், அதிர்வலை மூலம் ஊசி மருந்து செலுத்தும் கருவியைக் கண்டுபிடித்துள்ளோம். பால் பாயிண்ட் பேனாவை விட சற்று நீளமான இந்த கருவியில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டிருக்கும். இதில் உள்ள குப்பியில் மருந்தை நிரப்பி இயக்கினால், நைட்ரஜன் வாயு ஒலியை விட அதிக வேகத்தில் செல்லும் அதிர்வலையை உருவாக்கி, அதன்மூலம் மருந்தை நோயாளியின் உடலுக்குள் செலுத்தும்’’ என்றார்.
The post அதிர்வலை மூலம் மருந்து செலுத்தும் வலிக்காத ஊசியை கண்டுபிடித்தது மும்பை ஐஐடி: அதிர்வலை ஊசி என்பது என்ன? appeared first on Dinakaran.