*கிராம மக்கள் எதிர்பார்ப்பு
வருசநாடு : வருசநாடு அருகே காந்திகிராமத்தில் பாதியில் நிற்கும் தார்ச்சாலை பணிகள் வேகமெடுக்குமா என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் மேல்வாலிப்பாறை, காந்திகிராமம், ஐந்தரைபுலி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
இது தவிர கிராமங்களில் சுற்றிலும் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பீன்ஸ், எலுமிச்சை, கொட்டை முந்திரி இலவம்பஞ்சு உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. சீலமுத்தையாபுரம் கிராமம் வரை மட்டுமே தார்ச்சாலை வசதி இருந்தது. இதனால் காந்திகிராமம், மேல்வாலிப்பாறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சீலமுத்தையாபுரம் கிராமத்தில் இருந்து நடந்து செல்லும் நிலை காணப்பட்டது.
மேலும் தார்ச்சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு அனுப்பி வைக்க மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். மாட்டுவண்டிகளிலும், டூவீலர்களிலும் சேகரிக்கப்பட்ட விளைபொருட்களை சீலமுத்தையாபுரம் கிராமம் வரை எடுத்து வந்து அதன் பின்னர் லாரி உள்ளிட்ட வாகனங்களில் சந்தைகளுக்கு அனுப்பி வந்தனர்.
இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் விளைபொருட்களை சந்தைகளுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. இதேபோல பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு நாள்தோறும் ஐந்து கிலோமீட்டர் வரை நடந்து செல்லும் நிலை காணப்பட்டது.
இது போன்ற காரணங்களால் சீலமுத்தையாபுரம் கிராமத்திலிருந்து காந்திகிராமம் வரை புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் புதிய தார்சாலை அமைக்க வனத்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தனர்.
மாவட்ட அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகள் உடன் பலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி கிராமம் வரை புதிய தார்ச்சாலை அமைக்க அனுமதி பெற்றனர். இதனையடுத்து சீலமுத்தையாபுரம் கிராமத்திலிருந்து மேல்வாலிப்பாறை வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
ஆனால், காந்திகிராமத்திற்கு சாலை அமைக்க முடியாமல் பாதையில் நின்று விட்டது. இந்தப் பணிகள் நடைபெறும் சமயத்தில் தார்ச்சாலை அமைக்க வனத்துறையினர் மீண்டும் தடை விதித்தனர். புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பகுதியில் குறிப்பிட்ட 20 முதல் 50 மீட்டர் தொலைவு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனத்துறையினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வரை தார்சாலை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் காந்திகிராமத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காந்திக்கிராமம் கிராமவாசி கவுரி கூறுகையில், ‘‘பல வருட போராட்டத்திற்குப் பின்பு காந்தி கிராமத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் வனத்துறையினர் மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தியுள்ளனர். தார்ச்சாலை இல்லாததால் விவசாயிகள் விளைபொருட்களை சந்தைக்கு அனுப்பி வைக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதேபோல காந்திகிராமம், மேல்வாலிப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்கான ரேஷன் கடை 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அமைந்துள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் அதனை தலைச்சுமையாக சுமந்துகொண்டு வீடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்லும் மலைப்பாதை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
எனவே தற்போது இந்த மலைச் சாலை வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவு சிரமம் ஏற்பட்டுள்ளது. தவிர மழை பெய்யும் நேரங்களில் மாட்டுவண்டி, டூவீலர்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் இயக்க முடியாத நிலை உள்ளது.
அது போன்ற நேரங்களில் விவசாயிகள் விளை பொருட்கள் சந்தைக்கு அனுப்பி வைக்க முடியாமல் அதிக அளவில் நஷ்டம் அடைகின்றனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்களில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் காந்தி கிராமத்திற்கு சாலை அமைக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் வனத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி காந்தி கிராமத்திற்கு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ள தார் சாலை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என தெரிவித்தார்.
சாதாரணமாக செல்வதே பெரிய சவால்
இதுகுறித்து வியாபாரி கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களுக்கும் டூவீலர்களில் சென்று சோப்பு உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறேன். இதில் காந்திகிராமத்திற்கு செல்வது மட்டுமே மிகுந்த சவாலாக உள்ளது.
கிராமத்திற்கு செல்லும் மலைச் சாலை குண்டும் குழியுமாக அபாயமான நிலையில் உள்ளது. மாவட்ட வனத்துறை அதிகாரிகள் காந்திகிராமத்திற்கு புதிய தார்சாலை அமைக்க அனுமதி தரவில்லை என்றாலும் தற்போது உள்ள மலைச் சாலையை வாகனங்கள் எளிதில் சென்று வரும் அளவிற்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
The post வருசநாடு அருகே காந்திகிராமத்தில் பாதியில் நிற்கும் தார்ச்சாலை பணிகள் வேகமெடுக்குமா? appeared first on Dinakaran.