ரப்பர் குண்டுகளால் சுட்டு தமிழக வனப்பகுதிக்கு யானைகளை விரட்டிவிடும் கர்நாடக வனத்துறை: பயிர்களை நாசப்படுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

* சிறப்புசெய்தி
தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து, கடந்த 2004 பிப்ரவரியில் கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில், மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாகும். கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி என்று முக்கிய நகரங்களை வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளன. ஆந்திர, கர்நாடக மாநிலத்தையொட்டியுள்ள இந்த வனப்பகுதியில் யானைகள், கரடிகள், சிறுத்தைகள் வன விலங்குகள் வாழ்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் மட்டும், சுமார் 200 யானைகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு உட்பட்ட ஜவளகிரி, அய்யூர், நொகனூர், மரக்கட்டா உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ளன. தவிர ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காட்டிலும், சுமார் 30 யானைகள் உள்ளன.

இந்நிலையில் ஆண்டுதோறும் அக்டோபர் இறுதியில், கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் உணவு தேடி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் ராகி பயிர்களை குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள், சுமார் 4 மாதங்கள் முகாமிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன. இதில் விவசாயிகளின் நெல், ராகி, தக்காளி, பீன்ஸ், கேரட் மற்றும் பல்வேறு வகையான விவசாய பயிர்கள் நாசமாகின்றன.

ஒவ்வொரு முறையும் யானைகள் வந்து செல்லும் இந்த 4 மாதங்களில், சுமார் 4 பேர் வரையிலும் யானை தாக்கி இறப்பதும், ஓரிரு யானைகள் இறப்பதும் தொடர் கதையாகி வருகின்றன. ராகி என்பது யானைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். ராகியில் பால் வந்தால், அதன் வாசனை சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் யானைகள் அதை நுகர்ந்து கண்டுபிடித்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், யானையை பொறுத்த வரை எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் வந்தாலும், அந்த யானை வந்த பாதையை சரியாக ஞாபகம் வைத்து, திரும்பச் செல்லும் குணமுடையதாகும்.

மேலும், நாள்தோறும் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை யானை நடக்கக் கூடியது. தற்போது யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் வருகின்றன. வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவுகள், தண்ணீர் இல்லை என்பதால் அவை கிராமங்களுக்குள் வருவது தெரிய வந்துள்ளது. எவ்வளவுதான் மழை பெய்தாலும் மலைப்பகுதிகளில் குட்டைகள் ஏதும் இல்லாததால் வன விலங்குகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் தாகத்திற்காக யானைகள் தண்ணீர் தேடி, தென்பெண்ணை ஆற்றுக்கு வருகின்றன. இதேபோல போதுமான உணவுகள் இல்லாததாலும், விவசாய பயிர்களை தேடி வருவது தொடர்கின்றன. அவ்வாறு வரக்கூடிய யானைகள் விவசாய நிலங்களை நாசம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

இந்த யானைகள் கிராமத்திற்குள் வராமல் இருப்பதற்காக, வனப்பகுதியை சுற்றி அகழி வெட்டும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். ஆனாலும் விவசாயிகள் பலர் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக அந்த அகழிகள் உள்ள பகுதிகளில் மண்ணை போட்டு நிரப்புவதால், யானைகள் அந்த வழியாக வெகு சுலபமாக வந்து விடுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்த வரை இங்குள்ள வனப்பகுதியில் உள்ள யானைகளால் ஏற்படும் பயிர் சேதம், உயிர் சேதத்தை விட, கர்நாடகாவில் இருந்து 4 மாதங்கள் வந்து முகாமிடும் யானைகளாலேயே சேதம் அதிகமாவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கர்நாடகா வனப்பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளை, திரும்ப அந்த வனப்பகுதிக்கே கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் அனுப்புகிறார்கள். ஆனால் கர்நாடக வனத்துறையினரோ அவர்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, திரும்ப வரும் யானைகளை ரப்பர் குண்டு மூலமாக சுட்டு மீண்டும் திரும்ப தமிழக வனப்பகுதிக்கே அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘‘மனிதர்களாகிய நமக்குதான் தமிழகம், கர்நாடகம் என பிரிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறோம் யானைகளுக்கு இந்த பாகுபாடெல்லாம் கிடையாது.

உணவு எங்கிருக்கிறதோ அங்கு செல்கின்றன. போதுமான அகழிகள் வெட்டுதல், இரும்பு வட கம்பி வேலிகளை அமைத்தல் போன்ற திட்டங்களை தமிழக வனத்துறையினர் செயல்படுத்த வேண்டும், மேலும், யானைகளுக்கு வனப்பகுதிக்குள் தேவையான தண்ணீர், உணவுகள் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்கள், உயிர் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க மற்றும் குறைக்க முடியும். அதேபோல யானைகள் இறப்பையும் கட்டுப்படுத்த முடியும்’’ என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

* ரயில் மோதியதில் 7 யானைகள் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் ரயில் மோதி இறப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2003 மார்ச் மாதம் தண்ணீருக்காக ஊடேதுர்க்கம் காட்டில் இருந்து, 5 யானைகள், ராயக்கோட்டை அருகே உள்ள பெரியநாகதுணை பகுதிக்கு வந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது. இதில் 5 யானைகளும் இறந்தன. இதேபோல 2013 பிப்ரவரி 4ம் தேதி அதே பகுதியில் 2 யானைகள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில் மோதி இறந்தன. கடந்த 2015 பிப்ரவரி 5ம் தேதி ஓசூர் அருகே கோனேரிப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற குட்டி யானை, கார் மோதி உயிரிழந்தது. மேலும் 2016 ஜூலை 4ம் தேதி கோபசந்திரத்தில் அரசு பஸ் மோதி படுகாயமடைந்த யானை கோவையில் உள்ள யானைகள் காப்பகத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தது.

The post ரப்பர் குண்டுகளால் சுட்டு தமிழக வனப்பகுதிக்கு யானைகளை விரட்டிவிடும் கர்நாடக வனத்துறை: பயிர்களை நாசப்படுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: