சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகூர் ஈ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பாடல் குறுந்தகட்டினை வெளியிட்டார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, தமிழ்நாட்டின் நல்லிணக்க வரலாற்றிற்குச் சான்றளிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள “ஹபீபி” என்ற திரைப்படத்தில் Artificial Intelligence தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காலத்தால் அழியாத இசைமுரசு நாகூர் ஹனிபாவின் கம்பீரக்குரலுடன் கூடிய பாடல் குறுந்தகட்டினை வெளியிட்டார்.
இயற்கையிலேயே இசை ஞானம் கொண்டிருந்த நாகூர் ஹனிபா தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாடல் திறத்தாலும் உலகெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். நாகூர் ஹனிபா நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பாடல்களையும், திராவிட இயக்கப் பாடல்கள் மற்றும் இதர பாடல்களையும் பாடி பெரும் புகழ்பெற்றவர். பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார், அண்ணா, கலைஞர், காயிதே மில்லத் ஆகியோரது அன்பையும் பெற்றவர். நாகூர் ஹனிபா தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றியவர். நாகூர் ஹனிபா நிறைவான வாழ்க்கை வாழ்ந்து 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் நாள் மறைந்தார்.
இந்த நிகழ்வின்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்பு செயலாளர்கள் எஸ்.ஆஸ்டின், ப.தாயகம்கவி, எம்.எல்.ஏ., தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் இறையன்பன் குத்தூஸ் மற்றும் “ஹபீபி” என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடித்துள்ள திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா-இந்த ஹபீபி திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதிய கவிஞர் யுகபாரதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் சி.எஸ்.சாம், இயக்குநர் மீரா கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.
* ‘கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்’
திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: திமுகவின் கம்பீரக் குரல் “இசைமுரசு” நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்! எல்லோரும் கொண்டாடுவோம்! தலைவர் கலைஞரின் நண்பரும்-ஆருயிர்ச் சகோதரருமான “இசைமுரசு” ஹனிபா காலங்கள் கடந்து வாழ்வார்! கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post நாகூர் ஈ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் பாடல் குறுந்தகடு வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.