வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே மேல்மாயில் ஊராட்சிக்குட்பட்ட துருவம் மலைப்பகுதியில் கடந்த 18ம் தேதி அஞ்சலி என்ற இளம்பெண்ணை சிறுத்தை தாக்கி கொன்றது. தொடர்ந்து குடியாத்தம் அருகே வனப்பகுதியையொட்டி பகுதிகளில் குட்டிகளுடன் சிறுத்தை நடமாடியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் தொடர்பான ஓவியம் மற்றும் புத்தக கண்காட்சியை கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம், உள்ளது உண்மைதான். நேற்று கூட(நேற்று முன்தினம்) பேரணாம்பட்டு சாத்கர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. எனவே, வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். விளக்குகளை இரவு நேரத்தில் எரியவிட்டால் வனவிலங்குகளின் நடமாட்டம் குறையும்.
மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் வன விலங்குகளிடமிருந்து வனத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதி மக்களை பாதுகாக்க சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை சிறுத்தை நடமாட்டத்தால் இரவில் மக்கள் வெளியே வர வேண்டாம் : வேலூர் கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.