×

விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலை கொத்தட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூல்: மா.கம்யூ., விசிக முற்றுகை போராட்டம் அறிவிப்பு: பதற்றம்- போலீஸ் குவிப்பு


புவனகிரி: கடலூர்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொத்தட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதிகப்படியான கட்டணத்தை அரசியல் கட்சிகளும் எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் கிராமத்திலிருந்து சீர்காழி அருகே சட்டநாதபுரம் வரை ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த வழித்தடத்தில் ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தான் கடலூர்- சிதம்பரம் பிரதான சாலையாக செல்கிறது.

இதில், பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள், ரயில்வே பாலம், ஆற்று பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச் சாவடியில் டிசம்பர் 23ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி கார், ஜீப், வேன் அல்லது இலகுரக மோட்டார் வாகனம் ஒற்றை பயணத்திற்கான கட்டணம் ரூ.125, ஒரு நாளுக்குள் திரும்பும் பயண கட்டணம் ரூ.185, ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.4165, மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கான ஒற்றை பயண கட்டம் ரூ.60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனம் அல்லது மினி பேருந்துகள் ஒற்றை பயணத்திற்கான கட்டணம் ரூ.200, ஒரு நாளுக்குள் திரும்பும் பயண கட்டணம் ரூ.305, ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.6725, மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கான ஒற்றை பயண கட்டம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேருந்து அல்லது டிரக் ( இரண்டு அச்சுகள்) ஒற்றை பயணத்திற்கான கட்டணம் 425, ஒரு நாளுக்குள் திரும்பும் பயண கட்டணம் ரூ.635, ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.14090, மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கான ஒற்றை பயண கட்டம் ரூ.210 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்கள் ஒற்றை பயணத்திற்கான கட்டணம் ரூ.460, ஒரு நாளுக்குள் திரும்பும் பயண கட்டணம் ரூ.690, ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.15370, மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கான ஒற்றை பயண கட்டம் ரூ.230 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல அச்சுகள் கொண்ட கனரக கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றிச்செல்லும் வாகனம், பல அச்சுக்கள் கொண்ட வாகனம் (நான்கு முதல் ஆறு அச்சுகள்) ஒற்றை பயணத்திற்கான கட்டணம் ரூ.665, ஒரு நாளுக்குள் திரும்பும் பயண கட்டணம் ரூ.995, ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.22095, மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கான ஒற்றை பயண கட்டம் ரூ.330 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு கொண்ட வாகனம் (7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுக்கள் கொண்ட வாகனம்) ஒற்றை பயணத்திற்கான கட்டணம் ரூ.805, ஒரு நாளுக்குள் திரும்பும் பயண கட்டணம் ரூ.1210, ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.26900, மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கான ஒற்றை பயண கட்டம் ரூ.405 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 8 மணிக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் பணி துவங்கியது. சுங்கச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுங்க கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது, நெடுஞ்சாலை பணிகள் முடிவடையாமல் டோல்கேட் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று டோல்கேட் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் பதற்றம் நிலவுவதால், சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக் தலைமையில் கொத்தட்டை டோல்கேட்டில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆளில்லா சுங்கச்சாவடியான இந்த டோல்கேட்டில் சுங்க கட்டணம் செலுத்தினால் மட்டுமே வாகனங்கள் செல்வதற்கான வழி கிடைக்கும் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தனியார் பஸ்கள் ஸ்டிரைக்
பேருந்துகளுக்கான ஒரு முறை கட்டணம் ரூ.425, ஒரு மாதத்திற்கான 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் ரூ.14,090 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவு சுங்க கட்டணம் செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாது. அப்படி இயக்கினால் பஸ் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். அதனால் சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம் எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுங்கச்சாவடி திறக்கப்படும் நாளான இன்று (23ம் தேதி) சுங்கச்சாவடியில் பேருந்துகளை நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவது என, கடலுார் மாவட்ட தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் முடிவு செய்தனர். இப்போராட்டம் காரணமாக கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் 39 தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும், லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பில் வாகனங்களை டோல்கேட்டில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

The post விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலை கொத்தட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூல்: மா.கம்யூ., விசிக முற்றுகை போராட்டம் அறிவிப்பு: பதற்றம்- போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kothattai toll plaza ,Villupuram-Nagai 4-lane National Highway ,M.C.M. ,V.S.I.K. ,Bhuvanagiri ,Cuddalore-Chidambaram National Highway ,Villupuram ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...