×

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் தேங்கிய மழைநீரில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்

*அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட இனாம்மணியாச்சி கண்மாய் பகுதி மற்றும் ஜெயம் நகர் பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் போதிய வாறுகால் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி என எவ்வித வசதிகளும் இல்லை.

மேலும் அருகில் உள்ள கண்மாய் கரை உயர்த்தப்படாமலும், மறுகரையில் நீர்வரத்து வடிகால் இல்லாத சூழ்நிலை இருப்பதால் ஒவ்வொரு மழையின் போதும் கண்மாய் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் கண்மாய் கரையை கடந்து அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. மேலும் தெருக்கள் முழுவதும் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது மட்டுமின்றி, தெருக்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அந்த தெருக்களில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி தொற்று நோய்கள் ஏற்படும் சூழ்நிலையில் 20க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனவே, தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும், வாறுகால் வசதி, சாலை வசதி மற்றும் மின் விளக்கு வசதி செய்ய வேண்டும்.

கண்மாய் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை உயர்த்தி, தடுப்புச்சுவர் அமைப்பது மட்டுமின்றி நீர்வரத்து வாறுகாலுடன் சாலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தேங்கியுள்ள தண்ணீரில் குலவையிட்டு நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல்அறிந்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்இன்ஸ்பெக்டர்கள் வேல்பாண்டி, அருள்மொழி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கண்மாய் கரை பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அந்தப்பணிகள் தொடங்கும் என்றும், கண்மாய் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்து வாறுகாலுடன் சாலை அமைக்கப்படும்.

மற்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வாறுகால் அமைக்கப்படும், தற்காலிகமாக மழைநீர் தேங்கி நிற்கும் பகுதியில் சரள் மண் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் தேங்கிய மழைநீரில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Inammaniachchi ,Kovilpatti ,Inammaniachchi Kanmai ,Jayam Nagar ,
× RELATED கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்