சென்னை: கடலில் 150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகள் கண்காணிக்க மெரினா கலங்கரை விளக்கத்தில் ரேடார் கருவி, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்ரை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் 2வது நீளமான கடற்கரை. வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. வரை உள்ளது. 1880ம் ஆண்டுகளில் ஆளுநர் மவுண்ட் ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டப் என்பவரால் இந்த கடற்கரை முதன்முறையாக புதுப்பிக்கப்பட்டது.
சென்னை வரும் சுற்றுலா பயணிகள் மெரினா கடற்கரைக்கு தவறாது வருவது வழக்கம். மெரினா கடற்கரை பேருந்துகள், டாக்சிகள், கார் போன்ற வாகனங்கள் மூலம் எளிதில் செல்லும் வகையில் நகர் பகுதியில் உள்ளது. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் போது கடற்கரை பகுதியில் நடைபயிற்சி செல்லும் எல்லாரும் ஒரு இனிமையான அனுபவத்தை உணருகின்றனர். மாலையில், கடற்கரையில் கலைப்பொருட்கள், கைவினை, இன நகை மற்றும் உணவு பொருட்கள் விற்பனை களைகட்டும். குழந்தைகள் விளையாட சிறந்த இடமாக உள்ளது. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக இந்த கடற்கரை விளங்குவதால், திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-22ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கடற்கரைகளின் தரம், பாதுகாப்பு, தகவல் மற்றும் பாதுகாப்புச் சேவையை உயர்த்த, மாசுபாட்டை குறைக்க அடுத்த 5 ஆண்டுகளில் 10 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடலில் 150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகள் கண்காணிக்க மெரினா கலங்கரை விளக்கத்தில் ரேடார் கருவி, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ரேடார் கருவி மூலம் 150 கிலோ மீட்டர் தொலைவில் வரும் கப்பல்கள் மற்றும் படகுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னைக்கு வந்து செல்லும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரேடார் கருவி ஸ்கேன் செய்யும் பணிகளையும், அதில் உள்ள கேமரா புகைப்படம் எடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இந்த ரேடார் கருவி கலங்கரை விளக்கத்தின் 11வது மாடியில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வரும் கதிர்வீச்சு தாக்கம் காரணமாக 10வது மாடி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த ரேடார் கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரேடாரின் ஸ்கேன் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை, கலங்கரை விளக்க அதிகாரிகள் உடனுக்குடன் கடலோர காவல்படைக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் சக்திவாய்ந்த அந்த ரேடார் கருவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுதானது. அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ரேடாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அதில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால் கடற்கரைக்கு வரும் படகுகள் மற்றும் கப்பல்கள் குறித்த தகவல்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ரேடார் கருவி வாங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பெங்களூருவில் இருந்து புதிய ரேடார் கருவி கொண்டுவரப்பட்டு, 40 அடி உயரம் உள்ள கலங்கரை விளக்கத்தில் 60 அடி உயரம் கொண்ட கிரேன் இந்திரம் மூலம் புதிய ரேடார் கருவி பொருத்தப்பட்டது. சென்னை கலங்கரை விளக்கத்தில் இந்த ரேடார் கருவி பொருத்தப்பட்டதை அவ்வழியாக சென்ற பலரும் நின்று பார்த்து விட்டு சென்றனர். இதேபோல் மெரினா கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்களும் இதனை ஆச்சரியமாக பார்த்தனர். இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான சென்னை துறைமுகத்திற்கு நாள்தோறும் ஏராளமான கப்பல்களும் படகுகளும் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
The post 150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகளை கண்காணிக்க மெரினா கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த புதிய ரேடார் கருவி: கடலோர பாதுகாப்பு படை ஏற்பாடு appeared first on Dinakaran.