×

சிறுபான்மை மக்களின் இன்னல்களை துடைக்க தோழமையுடன் துணை நிற்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக உரையாற்றினார்.

முதல்வர் ஆற்றிய உரை:
நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் சூழல்களையெல்லாம் பார்க்கும்போது, சிறுபான்மையினர் நலனில் அக்கறையும் ஜனநாயகத்தின் மீது பற்றும் – சகோதரத்துவத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவர்கள். இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது.

அந்த வகையில், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் – அருட்தந்தை ஜோ அருண் அவர்கள் கல்விப் பணியோடு, அனைத்து மாவட்டங்களுக்கும் பயணித்து, சிறுபான்மையின மக்களுடைய கருத்துகளை கேட்டு. அவர்கள் நலனுக்காகச் செயல்படுகிறார். அவருடைய பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு நாசர் அவர்களும் தன்னுடைய துறையில் அரசு அறிவித்திருக்கும் திட்டங்கள் அனைத்தும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்து,

சிறுபான்மையின மக்களுடைய நலன்களையும், உரிமைகளையும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், சிறுபான்மைச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களைப் பார்த்துப் பார்த்து பாசத்தோடு செய்வோம். அதனால்தான், வரலாற்றுப் பக்கங்களில் திராவிட முன்னேற்றக் கழகம், சிறுபான்மையின சமூகத்தின் காவலனாக போற்றப்படுகிறது.

பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் காட்டிய வழியில், சிறுபான்மையினச் சகோதர சகோதரிகளின் அரணாக பணியாற்றி வருகிறோம். உங்கள் இன்னல்களைத் துடைக்க தோழமையோடு உடன் நிற்கிறோம்!
இன்று கொண்டாடப்படும் இந்தச் சிறுபான்மையின உரிமை நாள் விழாவில், இஸ்லாமிய, கிறித்தவ, சமண, பௌத்த சமயங்களைச் சேர்ந்த தலைவர்களும், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலோ இந்திய மொழிச் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றிருப்பது சிறப்புக்குரியது.

இந்த நேரத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மைச் சமூகத்திற்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் சிலவற்றை நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்…
* 1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையம்!
* 1990-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நலக்குழு!
* 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்!
* 2000-ஆம் ஆண்டில் உருது அகாடமி!
* தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகச் செலவுக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி!
* ஹஜ் மானியம் அதிகரிப்பு!
* நபிகள் நாயகம் பிறந்த நாள் அரசு விடுமுறை!
* சிறுபான்மையின மாணவியர் விமானப் பணிப்பெண் பயிற்சி பெற இலவச வசதி!
* 2007-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியருக்கு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு!
* 2007-ம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்கம்!
* 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம்! இப்படி, சிறுபான்மையின மக்களுக்காக முத்தமிழறிஞர் கலைஞர் செய்ததை நாள் முழுக்கப் பட்டியல் போட்டுக் கொண்டே இருக்கலாம்!

தலைவர் கலைஞர் அமைத்துக் கொடுத்த பாதையில் நடைபோடும் நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும் என்றால்…

* இசுலாமிய மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறுத்தியபோது. தமிழ்நாடு அரசே அதை வக்பு வாரியம் மூலம் வழங்கும் என்ற அறிவிப்பு.
* முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மாவட்டம் தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 ஆயிரத்து 517 மகளிருக்கு 9 கோடியே 59 இலட்சம் ரூபாய் உதவித் தொகை,
* தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 345 மகளிருக்கு 4 கோடியே 32 இலட்சம் ரூபாய் நிதியுதவி.
* தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 பழுதடைந்த தேவாலயங்களைச் சீரமைக்க 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மானியம்.
* தேனி, விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் துவக்கம்.
* கரூர், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்கள் துவக்கம்.
* சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் சென்னை. வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில், புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் என்று ஏராளமான நலத் திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.

சிறுபான்மையினரைப் பாதிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது என்று அறிவித்தது. சிறுபான்மையினருக்கு எதிராக பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற பா.ஜ.க.வின் திட்டத்திற்கு எதிராக சட்டப் போராட்டம் என்று தொடர்ந்து, சிறுபான்மையினர் உரிமைகளைக் காக்கச் செயல்பட்டு வருகிறோம். நாடு இன்றைக்கு இருக்கும் நிலையில், சிறுபான்மை சமூகத்தின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம்.

சிறுபான்மை மக்களின் உரிமையை, வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்முடைய திராவிட மாடல் அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. பெரும்பான்மையைப் பார்த்து பயப்பட தேவையில்லாத சூழலில் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவதுதான் மதச்சார்பின்மை கொள்கையின் மகத்துவம். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, தமிழ்நாடு.இருந்தாலும், இந்திய அளவில் நிலவும் சூழல் நம்மை கவலைப்பட வைப்பதாக இருக்கிறது. அத்தகைய சூழலை எதிர்கொள்ள சிறுபான்மைச் சமூகத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கான அத்தனை ஆதரவையும், திராவிட முன்னேற்றக் கழகமும், நமது திராவிட மாடல் அரசும் எப்போதும் நல்கும்!

இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மைக் கொள்கையை திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்நாளும் – எந்த நிலையிலும் பாதுகாக்கும். சிறுபான்மையினருக்கு என்றென்றும் அரணாகத் திகழும்! என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

The post சிறுபான்மை மக்களின் இன்னல்களை துடைக்க தோழமையுடன் துணை நிற்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : MU K. Stalin ,Chennai ,Minority Rights Day ,Trichchi ,Tamil Nadu State Minorities Commission ,Tamil Nadu ,Mu. K. Stalin ,
× RELATED சிறுபான்மை மக்களின் இன்னல்களை...