அண்மையில் ஒரு நண்பர் என்னிடத்திலே ஒரு கேள்வி கேட்டார்.
“பல இடங்களில் சென்று இதிகாச புராணங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்களே, இந்தக் காலத்திலே அதனால் என்ன நன்மை? எப்போதோ நடந்த கதைகளை திரும்பத் திரும்பச் சொல்வதினால் என்ன பலன் இந்த சமூகத்துக்குக் கிடைக்கிறது? இப்போதைய வாழ்வியல் பிரச்னைகளுக்கு இது ஏதாவது வழிகாட்டுகிறதா? என்றார். நான் அவரிடத்திலே அமைதியாகச் சொன்னேன்;
“எந்தப் பிரச்னைக்கு உங்களுக்கு தீர்வு வேண்டும்?’’ அவர் சொன்னார்:
“வேறு பிரச்னைகள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இப்பொழுது கூட்டுக் குடும்பம் சிதைந்துவிட்டது. எங்கே பார்த்தாலும் மருமகள் – மாமியார் பிரச்னை. புகுந்த வீட்டுத் துன்பங்களால் பெண்கள் அவதிப்படுகிறார்கள். அல்லது மருமகளாக வந்த பெண்ணால் தங்களுக்கு மரியாதையில்லை என்று பையனின் பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதனால் தனிக் குடித்தனம். இவைகளுக்கெல்லாம் உங்கள் ராமாயணத்திலோ, மகாபாரதத்திலோ என்ன தீர்வு இருக்கும்?’’ என்றார். அவரிடத்தில் நான் சொன்னேன்;
“நீங்கள் சொல்லுகின்ற இதே பிரச்னை ராமாயணத்தில் வருகின்றது. சீதை ஜனகனின் மகள். அவள் திருமணம் ஆகி புகுந்த வீடான அயோத்திக்கு வருகின்றாள். ராமாயணத்தில் சீதை திரும்ப தன்னுடைய தாய்வீட்டுக்குச் சென்றதாகவோ, தாய் வீட்டின் பெருமையைப் பேசியதாகவோ பெரிய அளவில் இல்லை. அவள் பேசும் பொழுதெல்லாம், தான் தசரதனின் மருமகள், ராமனின் மனைவி, கோசலையின் மருமகள், இப்படித்தான் பேசுகின்றாள்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவனோடு நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்கின்ற சூழ்நிலையில், கஷ்டமான காலத்தில் கணவனோடுதான் இருக்க வேண்டும் என்பதற்காக, “நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’’ என்று சொல்லி, கணவனுடைய கஷ்டங்களைத்தானும் ஏற்றுக்கொண்டாள்.’’
“இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். மாமனாரான தசரதனும் மாமியாரான கோசலை, சுமித்திரை, கைகேயி போன்றவர்களும், தங்கள் வீட்டுக்கு வந்த சீதையை எவ்வளவு பரிவோடு கவனித்தார்கள். சீதையும் அவர்களிடத்திலே எத்தனை மதிப்போடு நடந்து கொண்டாள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வால்மீகி நமக்கு வாழ்வியல் உண்மைகளை சித்திரம் தீட்டி காட்டி இருக்கின்றார்..’’
ராமன் காட்டுக்குப் போய்விட்டான். சீதை லட்சுமணன் இருவரும் அவனுடன் சென்றுவிட்டனர். தசரதன் ராமன் பிரிவைத் தாங்க முடியாமல் இறந்துவிட்டார். தசரதன் இறந்தது ராமனுக்குத் தெரியாது. பிறகு பரதன், அண்ணனாகிய ராமனைத்திரும்பவும் நாட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்பதற்காகவே காட்டுக்குச் செல்லுகின்றான். குகனோடு இணைந்து ராமன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவனிடத்திலே தந்தை இறந்துபோன செய்தியைச் சொல்லுகின்றான். இதை வால்மீகி மிக அற்புதமாகச் சொல்லுகின்றார்;
“தாம் ஸ்ருத்வா கருணாம் வாசம் பிதுர்மரண ஸம்ஹிதாம்
ராகவோ பரதே நோக்தாம் பபூவ கீதசேதந:’’
தன் பிதா மரணமடைந்தாரென்ற கடினமான வார்த்தையை ராமன் கேட்டு தேவேந்திரனால் விடப்பட்ட வஜ்ராயுதத்தைப் போல் பரதனால் சொல்லப் பட்ட வார்த்தை என்ற வஜ்ரத்தால் உயிர் நிலையில் அடிபட்டு, பிரக்ஞையற்று, கையோடு கையைப் பிசைந்துகொண்டு, காட்டில் மலர்கள் பழங்கள் காய்கள் இலைகளுடன் கூடின பெரிய மரம் கோடாலியால் வெட்டித் தள்ளப்பட்டதுபோல் பூமியில் விழுந்தார். மதயானை ஆற்றில் கரைகளை இடித்து விளையாடிக் களைத்துப் படுத்துத் தூங்குவதுபோல், பூமியில் விழுந்து கிடக்கும் ராமனை, லட்சுமண, பரத, சத்ருக்னர்களும், சீதையும், “ஓ….’’ என்று கதறிக்கொண்டு வாரியெடுத்து நீர் தெளித்தார்கள். பிறகு பிரக்ஞை வந்தது. கண்களிலிருந்து நீர் தாரை தாரை யாகப் பெருகிற்று. ராகவன் பரிதாபமாக பிரலாபிக்க ஆரம்பித்தார்.
இதற்கு பிறகு தன் தந்தையின் பெருமைகளை சொல்லி ராமன் புலம்புகிறான். அது இயல்பானது. ஆனால், அதற்கு பிறகு, அவன் சொல்வதில் இருந்துதான் மாமனாரான தசரதன் மருமகளை எப்படி நடத்தினார் என்பது தெரியவரும். ராமன் பேசுகின்றான்;
“ஸீதே! தனக்குப் பெண் குழந்தையில்லை என்று உன்னைப் பெற்றவர்களைக் காட்டிலும் உன்னிடத்தில் அதிகமான பிரீதியை வைத்துச் செல்வமாக வளர்த்த உன் மாமனார், பரலோகமடைந்தார். நான் கோபித்துக் கொண்டாலும் உனக்கு என்னால் ஏதாவது காரியம் ஆக வேண்டியிருந்தாலும், நீ அவரிடத்தில் சொல்லிக்கொள்வது வழக்கம். உன்னை அவ்வளவு அருமையாக வளர்த்த தசரதர், இறந்துவிட்டார். என்னைவிட உனக்கே அதிகத்துக்கம் என்பதில் சந்தேகமில்லை; இனி மேல் நீ யாரிடத்தில் சொல்லிக் கொள்வாய்?!’’
இந்தக் காட்சியை கம்பரும் விட்டுவிடவில்லை. தமக்கே உரித்தான முறையில் பதிவு செய்கிறார். ராமன், சீதையிடம் தசரதனின் மரணத்தைக் கூறுகிறான்.
“நல் நெடுங் கூந்தலை நோக்கி நாயகன்
என் நெடும் பிரிவினால் துஞ் சினான்’’
– என்பது பாட்டு.
“என் பிரிவு தாளாமல் தந்தை இறந்துவிட்டார்’’ என்றுகூற, சீதை தாங்கொணாத்துயர் அடைகிறாள்.
“துண்ணெனும் நெஞ்சினாள் துளங்கினாள் துணைக்
கண் எனும் கடல் நெடுங் கலுழி கான்றிட
மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள்
பண் எனும் கிளவியால் பன்னி ஏங்கினாள்.’’
சீதை பூமியிலிருந்து பிறந்தவள் அல்லவா. அவளை ஜனகன் அடையும் வரை காத்த செவிலித்தாய் பூமி. அந்த செவிலித் தாயாகிய பூமியின் மீது தனது கையை ஊன்றிக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாளாம். மாமனாரிடம் சீதை கொண்ட மதிப்பும், சீதையிடம் தசரதன் கொண்ட அன்பும் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றது என்பதை ராமாயணத் திலிருந்து தெரிந்து கொண்டால், ஓரளவாவது அதைப் பின்பற்ற முடிந்தால். நம்முடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதையாது. ஏதாவது ஒரு இடத்தில் தனித் தனியாக இருந்தாலும்கூட மனம் ஒன்று பட்டு ஒருவருக்கொருவர் மரியாதையோடும், நம்பிக்கையோடும் இருக்க முடியும் என்பதைத்தான் ராமாயணத்தின் இந்தச்சம்பவம் நமக்குக் காட்டுகின்றது.
இந்த விஷயத்தை இன்னும் புரிந்து கொள்ள ஒரு பாசுரம் சொல்கிறேன்;
“ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து மணாட்டுப்
புறம்செய்யுங் கொலோ.’’
பெரியாழ்வார், திருமொழியில் உள்ள இந்தப் பாசுரம் ஒரே ஒரு பெண்ணைப் பெற்று திருமணம் செய்து தரும் நிலையில் உள்ள பெற்றோர்களின் மனநிலையைப் பேசும். ஒரே ஒரு பெண். அவளை மஹாலட்சுமிபோல வளர்த்தேன். இன்று கல்யாணம் செய்து கொண்டு போகிறாள். அவள் போகிற இடத்தில் மாமியாரான யசோதை, இவளுக்கு ஒரு தாயாக அன்பு பாராட்டி வைத்துக் கொள்வாளோ,
அல்லது பொதுவான உலகியல்படி யாரோ பெற்ற பெண் தானே என்று அன்பற்ற நிலையில் இருப்பாளோ? பெண்ணைப் பெற்றவர்களுக்கு 1400 வருஷங்களுக்கு முன் இருந்த மன நிலையை பெரியாழ்வார் பதிவு செய்கிறார். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, மருமகளை எப்படி நடத்த வேண்டும் என்பது. இரண்டாவது, எப்படி நடத்தக்கூடாது என்பது. ராமாயணம் அல்லது ஆழ்வார்கள் பாசுரங்கள் ஆன்மிக நூலாக இருக்கலாம் அது நமக்கு வாழ்வியலையும் சொல்லுகின்றது என்பதைப் புரிந்து கொண்டால், நல்லது.
The post குடும்ப உறவுகள் சிறக்க ஒரே வழி… appeared first on Dinakaran.