திருவொற்றியூர்: சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பூண்டி ஏரி நிரம்பியதால், 16,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, மணலி புதுநகர் மற்றும் சடையங்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தற்போது, மழை ஓய்ந்துள்ளதால், பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. அதேபோல் புழல் ஏரியிலிருந்தும் 1000 கன அடியிருந்து 500 கன அடியாக உபரி நீர் திறக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கொசத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்ததால், முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் நேற்று தங்களது குடியிருப்புகளுக்கு திரும்பினர்.
முன்னதாக சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் காட்டாரவி தேஜா, கவுன்சிலர் ராஜேந்திரன், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் விஜய் ஆகியோர் முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்களுக்கு உணவு வழங்கி பாதுகாப்பாக அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
உபரி நீரில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரைகள் சடையங்குப்பம், பர்மா நகர் பகுதிகளில் தெருக்களில் குவிந்திருந்தால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் மூலம் தெருக்களில் குவிந்து கிடந்த ஆகாயத்தாமரை மற்றும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தினர்.
The post மணலியில் வெள்ள நீர் வடிந்ததால் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள் வீடு திரும்பினர்: தெருக்களில் குவிந்த ஆகாயத்தாமரை அகற்றம் appeared first on Dinakaran.