×

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் 145வது ஆண்டு ரமணர் ஜெயந்தி விழா: இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்பு

திருவண்ணாமலை, டிச.18: திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நேற்று ரமணரின் 145வது ஆண்டு ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது. அப்போது, இசையமைப்பாளர் இளையராஜா பக்திப் பாடல்களுடன் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. ஞான தபோதனரை வாவென்று அழைக்கும் ஆன்மிக திருநகரம் திருவண்ணாமலை. எண்ணற்ற மகான்களையும், ஞானிகளையும் தன்னகத்தே ஈர்த்த மலை அண்ணாமலை. அதன்படி, மதுரை அடுத்த திருச்சுழியில் 30.12.1879ல் அவதரித்தவர் மகான் ரமணர், நினைக்க முக்தித் தரும் திருவண்ணாமலையை தரிசித்து ஞானம் பெற்றார். இந்நிலையில், மகான் ரமணரின் ஜெயந்தி விழா, ஆண்டுதோறும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணர் பிறந்த நட்சத்திரதன்று கொண்டாடப்படுகிறது.

அதன்படி, ரமணர் அவதரித்த மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திர தினமான நேற்று, ரமண மகரிஷியின் 145வது ஜெயந்தி விழா ரமணாஸ்ரமத்தில் விமரிசையாக நடந்தது. அதையொட்டி, நேற்று அதிகாலை 4 மணிக்கு ருத்ரா அபிஷேகம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரம், தீபாரதனை, சிறப்பு தமிழ் பாராயணம் ஆகியவை தொடர்ந்து நடந்தது. இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட ரமண பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை ஆராதனை நடந்தது. பக்திப் பாடல்களை இசைத்தபடி இளையராஜா ஆராதனை நடத்தினார். ரமணர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஆஸ்ரமம் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவில், ஆஸ்ரம நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான ரமண பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் 145வது ஆண்டு ரமணர் ஜெயந்தி விழா: இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED வெள்ள சேத ஆய்வுக்கு பிறகு சாத்தனூர் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு