- பர்வத மலைகள்
- தனுர் மாத விழா
- Kalasappakkam
- கிரிவலம்
- பிரஹன்ன நாயகி சமேத காரை கண்டீஸ்வரர் கோவில்
- கோயில்மதிமங்கலம்
- தென்மகாதேவமங்கலம்
கலசப்பாக்கம்: தனுர் மாத உற்சவத்தையொட்டி பர்வத மலையில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். கலசப்பாக்கம் அடுத்த கோயில்மாதிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பிரஹன்ன நாயகி சமேத கரை கண்டீஸ்வரர் கோயில் மற்றும் தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வத மலை மீது அமைந்துள்ள பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயிலில் தனுர் (மார்கழி) மாத உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும், நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர். அதன்படி கரை கண்டீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கடலாடி, பட்டியந்தல், வேடப்புலி, வெள்ளந்தாங்கீஸ்வரர், அருணகிரிமங்கலம், தென்மகாதேவமங்கலம், கோயில்மாதிமங்கலம் ஆகிய கிராமங்கள் வழியாக 23 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் வந்தனர். அதேபோல், பிரஹன்ன நாயகி சமேத கரை கண்டீஸ்வரர் மற்றும் பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜுனேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் நேற்று பிற்பகல் பர்வத மலையை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று இரவு வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயிலில் கிரிவலம் முடிந்தது.
தொடர்ந்து இன்று காலை 2ம் நாளாக உற்சவ மூர்த்திகள் ஆதமங்கலம் வழியாக கிரிவலம் வந்து மாலை கரை கண்டேஸ்வரர் கோயிலில் கிரிவலம் முடிய உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக கொரோனா மற்றும் கோயில் திருப்பணி காரணமாக பர்வத மலையை உற்சவ மூர்த்திகள் கிரிவலம் வரவில்லை. தற்போது பணிகள் முடிந்து சுவாமி கிரிவலம் வந்ததால் பக்தர்களும், ஆன்மிகவாதிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தனுர் மாத உற்சவத்தில் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பர்வத மலையை கிரிவலம் வந்து இன்னிசை கச்சேரியை தொடங்கி வைத்தார். கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
The post தனுர் மாத உற்சவத்தையொட்டி பர்வத மலையில் கொட்டும் பனியிலும் பக்தர்கள் கிரிவலம் appeared first on Dinakaran.