×

பாம்பன் மீனவர்களுக்கு ஜாக்பாட்: 250 டன் பேசாளை ஒரே நாளில் சிக்கியது

ராமேஸ்வரம்: பாம்பனில் நேற்று ஒரே நாளில் 250 டன் பேசாளை மீன் வர்த்தகம் நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்குவாடி மீனவர்கள், நேற்று முன்தினம் 90 விசைப்படகுகளில் மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இரவு மீன்பிடித்து நேற்று காலையில் கரை திரும்பிய படகுகளில் டன் கணக்கில் பேசாளை மீன்கள் சிக்கி இருந்தன. படகில் பிடித்து வரப்பட்ட மீன்களை பிளாஸ்டிக் கூடைகளில் அள்ளி கரைக்கு கொண்டு வந்தனர். சீலா, கணவாய், மாவுலா, விலை மீன், திருக்கை என பலவகை மீன்கள் இருந்தன. குறிப்பாக, டன் கணக்கில் சிக்கியதால் இறங்கு தளம் முழுவதும் பேசாளை மீன் கூடை கூடையாக நிரம்பி காணப்பட்டது.

சராசரியாக சுமார் 30 படகுகளில் ஒரு டன் முதல் இரண்டு டன் வரையும், 40 படகுகளில் 3 முதல் 4 டன் வரையும், 10 படகுகளில் 5 முதல் 6 டன் வரையும் பேசாளை மீன்கள் சிக்கியிருந்தன. கிலோ ரூ.18க்கு விற்பனையான இந்த மீன் நேற்று அதிக வரத்து காரணமாக ரூ.12க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 250 டன் பேசாளை மீன் வர்த்தகம் நடைபெற்றது. இதனால் நேற்று மாலை வரை மீன் லாரிகளில் வியாபாரிகள் மீன்களை ஏற்றியதால், பகல் முழுவதும் தெற்குவாடி கடற்கரை பரபரப்பாக காணப்பட்டது. பேசாளை மீன் விலை குறைந்தாலும் லாபம் அடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

The post பாம்பன் மீனவர்களுக்கு ஜாக்பாட்: 250 டன் பேசாளை ஒரே நாளில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Pamban ,Rameswaram ,Gulf of Mannar ,
× RELATED பாம்பன் ஜெட்டி பாலத்தின் அடியில் மணல் குவியலால் மீனவர்கள் அவதி