×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1,500 கோடியில் காலணி தொழிற்சாலை: 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1,500 கோடி முதலீட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டை சேர்ந்த ஹோங்பு நிறுவனம் ரூ.1,500 கோடி முதலீடு மற்றும் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார், அந்த இலக்கினை எய்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

அந்த வகையில், தைவான் நாட்டை சேர்ந்த ஹாங்பு இண்டஸ்ட்ரீயல் குழுமம் 20க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை கொண்ட பன்னாட்டு குழுமம் ஆகும். இந்த குழுமம் விளையாட்டு காலணிகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதன் மூலம் உலகளவில் 2வது பெரிய காலணி உற்பத்தியாளராக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் நைக், கன்வர்ஸ், வேன்ஸ், பூமா, யுஜிஜி, அண்டர் ஆர்மர் போன்ற சர்வதேச அளவில் வணிக முத்திரை கொண்ட நிறுவனங்களுக்கு காலணிகள் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சேவைகளையும் வழங்கி வருகிறது.

மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஹோங்பு நிறுவனத்திற்கு, ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கம் தொழில் பூங்காவில் 200 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்நிறுவனம் தற்போது ரூ.1,500 கோடி முதலீட்டில், 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கவுள்ளது.

இத்திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் அருண்ராய், தோல் ஏற்றுமதி கவுன்சில் செயல் இயக்குநர் செல்வம்,

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் (சிப்காட்) மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் அலர்மேல்மங்கை, ஹோங்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் டி.ஒய். சாங், இயக்குநர் ஜாக்கி சாங், ஜேவி பங்குதாரர் மற்றும் இயக்குநர் அகீல் பனாருனா, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

* ஹோங்பு நிறுவனத்திற்கு ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கம் தொழில் பூங்காவில் 200 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தைவான் நாட்டை சேர்ந்த ஹோங்பு இண்டஸ்ட்ரீயல் குழுமம் 20க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை கொண்ட பன்னாட்டு குழுமம்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1,500 கோடியில் காலணி தொழிற்சாலை: 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : factory ,Ranipet district ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Panapakkam Industrial Park ,General Secretariat ,Dinakaran ,
× RELATED நம்மாழ்வார் விருது வழங்க நிலத்தில் மண் பரிசோதனை