×

எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் முதல் சின்ன குப்பம் வரை தூண்டில் வளைவு இல்லாததால் கடலில் மூழ்கும் குடியிருப்புகள்: மீனவ மக்கள் பரிதவிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் முதல் எண்ணூர் வரை கடற்கரை பகுதியில் சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நல்ல தண்ணீர் ஒடை குப்பம், திருச்சினாங்குப்பம், திருவொற்றியூர் குப்பம், பட்டினத்தார் கோயில் குப்பம், காசி விஸ்வநாதர் கோயில் குப்பம், இந்திரா காந்தி குப்பம், எர்ணாவூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், காட்டுக்குப்பம் என சுமார் 25க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.  இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் கடலில் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்கின்றனர். ஒரு காலத்தில் இந்த கிராமங்களில் மெரினாவை போல் பரந்த மணல் பரப்பு இருந்தது. மீனவ குடியிருப்புகளில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு மணலாகவே காட்சியளித்தது.

இந்த மணல் பரப்பை ஒட்டி சுமார் 40 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய காசி விஸ்வநாதர் கோயில், 1850ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆங்கிலேயர் பள்ளி, சுமைதாங்கி, பல்வேறு தொழில் செய்யும் 31 கூடங்கள் அடங்கிய சுந்தரம் எஸ்டேட், அம்பிகா திரையரங்கம், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம், புங்கை, பூவரசு, தென்னை போன்ற மரங்கள், கோயில்கள், கிணறுகள், பழங்காலத்து வீடுகள் உள்ளிட்டவை இருந்தன.

மேலும் கடற்கரையில் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு படகுகள், கட்டுமரங்களை பார்க்க முடியும். அந்த அளவிற்கு ஒரு இயற்கை சூழல் நிறைந்த கடலோர பகுதியாக இருந்தது. ஆனால், 1975ம் ஆண்டுக்கு பிறகு இந்த எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள கடற்கரை சிறிது சிறிதாக கடல் அலையால் அரிக்கப்பட்டு மணல் பகுதி குறைய தொடங்கியது. இந்த கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கடலரிப்பை தடுக்க கரையோரங்களில் பாறாங்கற்களை கொட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. ஆனால் இதை செயல்படுத்த காலம் அதிகமாக தேவைப்பட்டது. இந்த இடைவெளியில் கடல் அரிப்பு அதிகமாகி, கடலோரத்தில் இருந்த வீடுகள், பள்ளிகள், நீர் ஆதாரமாக இருந்த கிணறுகள் போன்றவற்றை படிப்படியாக கடலுக்குள் சென்றன. அதுமட்டுமின்றி நல்ல தண்ணீர் ஒடைகுப்பம், ஒண்டி குப்பம், லட்சுமிபுரம், சதானந்தபுரம், ஏழு குடிசை, பலகை தொட்டி குப்பம், காசி கோயில் குப்பம், காசி விசாலாட்சிபுரம் போன்ற பல மீனவ கிராமங்களில் பெரும்பாலான பகுதி படிப்படியாக கடலில் மூழ்கின.

ஒரு கட்டத்தில் மீனவர்களின் தெய்வமாக விளங்கிய காசி விஸ்வநாதர் கோயில் கோபுரத்துடன் படிப்படியாக கடலில் மூழ்கியது. இதையடுத்து கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என்ற குரல் மீனவர் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் ஓங்கி ஒலித்தது. இதனை தொடர்ந்து காசிமேடு முதல் எண்ணூர் வரை குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 1998ம் ஆண்டு கடல் அரிப்பை தடுக்க கடற்கரைகளில் ராட்சத பாறாங்கற்கள் கொட்டும் பணி தொடங்கியது.

இதன் காரணமாக 2004ம் ஆண்டு சுனாமியின் போது, இந்த கரையோரங்களில் பாறாங்கற்கள் போடப்பட்டிருந்த பல பகுதிகள் பாதுகாக்கப்பட்டன என்றாலும், பல இடங்களில் கடற்கரையில் கொட்டப்பட்ட பாறாங்கற்களையே சுனாமி அலைகள் கடலுக்குள் இழுத்து சென்றது. இதையடுத்து கடல் சார் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து, கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என தெரிவித்தனர். அதன்பேரில், திருவொற்றியூர் முதல் எண்ணூர் வரை தூண்டில் வளைவு அமைக்கும் நடவடிக்கையில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதன்படி, கடந்த 2006ம் ஆண்டு திருவொற்றியூர் சுங்கச்சாவடி முதல் ராமகிருஷ்ணா நகர் வரை முதல்கட்டமாக சுமார் ₹28 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து 2017ல் நெட்டுக்குப்பம் – தாழங்குப்பம் வரை கடல் பகுதியில், ₹31.82 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. இந்நிலையில், அதன் பிறகு வந்த புயல் கால கடல் சீற்றத்தில் நெட்டுகுப்பத்தில் போடப்பட்ட தூண்டில் வளைவுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. எடை குறைந்த கற்களை பயன்படுத்தியதால் இந்த தூண்டில் வளைவுகள் வலுவிழந்து கடலில் மூழ்கியது.

இதையடுத்து 18.2.2019 அன்று ₹38.38 கோடி செலவில், நெட்டுக்குப்பத்தில் இருந்து எர்ணாவூர் குப்பம் வரை 9 இடங்களில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் சின்ன குப்பம் வரை மட்டுமே தூண்டில் வளைவு போடப்பட்டது. விடுபட்ட இடங்களான சின்ன குப்பம் முதல் எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் வரை தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், இந்திரா காந்தி குப்பம் முதல் எர்ணாவூர் குப்பம் வரை கரையோரத்தில் போடப்பட்ட கடல் தடுப்பு பாறாங்கற்களும் சிதறி போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால் கடல் சீற்றம் ஏற்பட்டால் எண்ணூரின் மத்திய பகுதியில் உள்ள இந்த கிராமங்கள் கடல் அலையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சுனாமி போன்ற பேரிடர் ஏற்பட்டால் இந்த கிராமங்களின் வழியாக கடல் நீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள் இடிந்து விழுவதோடு, அருகிலுள்ள கோரமண்டல் உர தொழிற்சாலையும் பாதிக்கப்பட்டு அமோனியா வெளியேறி சுற்று வட்டாரத்தில் 5 கிலோ மீட்டர் சுற்றளவு வரை வசிக்கும் மக்களுக்கு பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே, சின்ன குப்பம் முதல் வடக்கு பாரதியார் நகர் வரை தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், ‘‘கடந்த காலங்களில் கடரிப்பை தடுக்க கால தாமதமாக திட்டத்தை செயல்படுத்தியதால் பல வீடுகள் கடலில் மூழ்கியது. 2011ம் ஆண்டு தானே புயலில் நெட்டு குப்பத்தில் மீனவர்களின் பல குடியிருப்புகள் கடலில் புதைந்தது. தற்போது எர்ணாவூர் குப்பம், இந்திராகாந்தி குப்பம் பர்மா நகர், நேதாஜி நகர் எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் ஆகிய கிராமங்களில் தூண்டில் வளைவு இல்லாததால், வரும் காலத்தில் அழிந்துவிடும் நிலை உள்ளது. இங்கு தூண்டில் வளைவு அமைக்க அனுமதி கேட்டு கிடைக்க வில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மற்றும் பாண்டிசேரி கடற்கரை பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

விடுபட்ட இடங்களில் தூண்டில் வளைவு அமைக்காமல் அதிகாரிகள் அலட்சிய போக்கில் செயல்படுகின்றனர். கடலோடு போராடும் மீனவர்களின் வாழ்க்கை கடலோடு கரைந்து விடுகிறது. எங்களின் எதிர்காலத்தை பாதுகாக்க எண்ணூரில் விடுபட்ட கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் முதல் சின்ன குப்பம் வரை தூண்டில் வளைவு இல்லாததால் கடலில் மூழ்கும் குடியிருப்புகள்: மீனவ மக்கள் பரிதவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ernavur North Bharathiyar Nagar ,Chinna Kuppam ,Thiruvottriyur ,Ennore ,Kuppam ,Tiruchinangupam ,Thiruvottriyur Kuppam ,Pattinathar Temple Kuppam ,Kashi Vishwanathar Temple Kuppam ,Indira Gandhi Kuppam ,Ernavur ,
× RELATED எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் முதல்...