×

புழல் அருகே தனியார் கார் சர்வீஸ் சென்டரில் தீ விபத்து: 4 கார்கள் எரிந்து நாசம்

புழல்: புழல் அருகே தனியார் கார் சர்வீஸ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 கார்கள் எரிந்து நாசமாகின. செங்குன்றம் அடுத்த தண்டல்கழனியில் பிரபல தனியார் நிறுவனத்தின் கார் சர்வீஸ் சென்டர் இயங்கி வருகிறது. இங்கு நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, காற்றில் தீ மளமளவென பரவி, அங்கிருந்த கார்கள் எரியத் தொடங்கின. இதைக் கண்ட காவலாளி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு பெட்ரோல், டீசல், எண்ணெய் உட்பட எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருட்கள் இருந்ததால் தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது.  தொடர்ந்து ரசாயன நுரை கலவையை பீய்ச்சியடித்து தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் சர்வீஸ் சென்டரில் இருந்த 4 கார்கள் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புழல் அருகே தனியார் கார் சர்வீஸ் சென்டரில் தீ விபத்து: 4 கார்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Thandalkazhani ,Chengunram ,Dinakaran ,
× RELATED சிறை கைதிக்கு கஞ்சா சப்ளை முதன்மை காவலர் பணியிடை நீக்கம்