சென்னை: தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் கடைகளில் அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்குதல் திட்டத்தினை முதன்முதலாக காஞ்சிபுரம் வடக்கு மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களில் அமல்படுத்தியது. இந்த திட்டம் கடந்த 25 நாட்களாக மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய மதுபானங்களுக்கு ரசீது வழங்கி உண்மை தன்மையுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் எந்த இடையூறும் தராமல் அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் மதுபான பிரியர்கள் சுலபமாக பணத்தை செலுத்தி விட்டு வாங்கி செல்கின்றனர். இந்த திட்டமானது அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்குதல் மற்றும் குறைபாடுகள் ஏதும் இல்லாமல் செயல்படுத்தவும், கிடங்கு மற்றும் கடை பணியாளர்களின் வேலையை எளிமைப்படுத்துவதற்காகவும், வாடிக்கையாளர்கள் இடையே உள்ள பெரிய குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.
இதனை போன்றே அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடையில் மதுபானம் வாங்கியவர்கள் சில்லரை விற்பனை விலையை சரியாக செலுத்தி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்தனர். கூலி தொழிலாளர்கள் தங்கள் உடல் அசதியை போக்கிக் கொள்வதற்காக மதுபானங்களை வாங்கி அருந்துகின்றனர்.
ஆனால் ஒவ்வொரு முறை வாங்கும்போதும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக பணம் செலுத்தி வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் தமிழக அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தால் மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த தொகையை மட்டும் செலுத்தி மதுபானம் வாங்கி அருந்துவது மகிழ்ச்சியாக இருப்பதாக மது பிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
The post தமிழக அரசின் உத்தரவின் பேரில் மதுபானங்களுக்கு ரசீது: மது பிரியர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.