இந்தியாவுடனான 3வது டெஸ்டில் ஸ்மித், ஹெட் அதிரடி சதம்

பிரிஸ்பேன்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்டின் 2ம் நாளான நேற்று ஆஸி வீரர்கள் அபாரமாக ஆடி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன் குவித்தனர். இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.  ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் 3வது டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி நிதானமாக ஆடிக் கொண்டிருந்தபோது கனமழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. ஆஸி, முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்துள்ளது. அந்த அணியின் கவாஜா 19, மெக்ஸ்வீனி 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 2ம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. துவக்க வீரர்களான உஸ்மான் கவாஜா 21, நாதன் மெக்ஸ்வீனி 9 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின் வந்த மார்னஸ் லபுஷனேவும் 12ல் வீழ்ந்தார். இருப்பினும், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்து இந்திய பந்து வீச்சை சிதறடித்தனர். ஸ்கோர் 316 ஆக இருந்தபோது, பும்ரா பந்து வீச்சில் ஸ்மித் 101 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து அனாயாசமாக ஆடிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டும், 152 ரன்னில், பும்ரா பந்தில் பண்ட்டிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில், ஆஸி, 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது. அலெக்ஸ் கேரி 45, மிட்செல் ஸ்டார்க் 20 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ஆஸி அணியின் பேட்ஸ்மேன்களை இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே கட்டுக்குள் வைத்திருந்தார். 25 ஓவர்களை வீசிய அவர் 7 மெய்டன் ஓவர்களுடன், 72 ரன் மட்டுமே தந்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முகம்மது சிராஜ் 1 விக்கெட் எடுத்தார். இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது. ஆஸியின் கையில் மேலும் 3 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் ஆஸி வீரர்கள் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு இந்தியாவுக்கு நெருக்கடி தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்தியாவுடனான 3வது டெஸ்டில் ஸ்மித், ஹெட் அதிரடி சதம் appeared first on Dinakaran.

Related Stories: