உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனை எதிர்கொள்வதற்கான போட்டியாக, கடந்த ஏப்ரலில், உலக செஸ் கூட்டமைப்பு (பிடே) நடத்திய ஆண்களுக்கான கேண்டிடேட்ஸ் டோர்னமென்ட் அமைந்தது. கனடாவின் டொரன்டோ நகரில் நடந்த அந்த போட்டியில் இந்தியா சார்பில் பல வீரர்கள் கலந்து கொண்டனர். டபுள் ரவுண்ட் ராபின் முறையில் நடந்த அந்த போட்டியில் 7 பேரை எதிர்கொண்டு இறுதியில் அதிரடியாக வெற்றியும் பெற்றார், குகேஷ். அதன் மூலம் கேண்டிடேட்ஸ் டோர்னமென்டை உலகளவில் இளவயதில் வென்ற நாயகனாக உருவெடுத்தார். அந்த வெற்றியால், 2023ல் உலக செஸ் சாம்பியன் ஆன சீனாவின் கிராண்ட் மாஸ்டர் டிங் லிரெனுடன் (32) மோதும் வாய்ப்பு குகேசுக்கு கிடைத்தது. இருவருக்குமான போட்டிகளை சிங்கப்பூரில், டிசம்பரில் 14 சுற்றுகளாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. ஒரு சுற்றில் வெற்றி பெற்றால் ஒரு புள்ளி, டிரா செய்தால் அரை புள்ளி கிடைக்கும். குறைந்த பட்சம் 7.5 புள்ளிகள் பெறுபவர் உலக சாம்பியனாக உருவெடுப்பார் என அறிவிக்கப்பட்டது.
கடந்த நவ.25ல் துவங்கிய புதிய உலக செஸ் சாம்பியனை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகளின் முதல் சுற்றில் அனுபவம் வாய்ந்த வீரரான லிரெனுடன் இந்தியாவின் பயமறியாத இளங்கன்றாக குகேஷ் மோதினார். 7 ஆண்டுகளாக கண்டு வரும் கனவை நனவாக்க கிடைத்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நாட்டை பெருமைப்படுத்த எண்ணிய குகேசுக்கு அந்த சுற்றில் அதிர்ச்சித் தோல்வியே கிடைத்தது. இருப்பினும் கலங்காத மனதுடன் அடுத்த சுற்றுக்கு தயாரானார் குகேஷ். 2வது சுற்று டிராவில் முடிந்தது. தளராத முயற்சிகளுடன் 3ம் சுற்றில் அடியெடுத்து வைத்த குகேசுக்கு ஆறுதலாக வெற்றிக் கனி கிட்டியது. இதனால் இருவரும் தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். அதற்கு பின் தொடர்ந்த சுற்றுகள் யாருக்கும் வசப்படாமல் இருவரின் பொறுமையை அதிகமாகவே சோதித்து பார்த்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 11வது சுற்றில் வெள்ளைக் காய்களுடன் ஆடிய குகேஷ், சீன வீரர் செய்த சிறு தவறை சாமர்த்தியமாக பயன்படுத்தி அதிரடி வெற்றி பெற்றார்.
அதனால், லிரெனை விட ஒரு புள்ளி கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார் குகேஷ். ஆனால், குகேஷின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. அதன் பின் நடந்த 12வது சுற்றில் ஆர்ப்பரித்து எழுந்த லிரென், தன் அனுபவத்தால் குகேசை வென்று அதிர்ச்சியூட்டினார். விளைவு, இருவரும் தலா 6 புள்ளிகளுடன் மீண்டும் சமநிலைக்கு வந்தனர். மீதம் இருந்தது இரு சுற்றுகளே. யாருக்கு கிடைக்கப் போகிறது செஸ் உலகின் அரியாசனம் என்ற கேள்வி, 140 கோடி இந்தியர்களின் மனங்களை உலுக்கி எடுத்தது. அவர்களின் கேள்விக்கு விடை, 13வது சுற்றிலும் கிடைக்கவில்லை. இருவரும் சளைக்காமல் சமபலத்துடன் ஆடியதால் டிரா செய்ய சம்மதித்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 12ம் தேதி 14வது மற்றும் இறுதிப் போட்டி நடந்தது.
என்ன நடக்குமோ என போட்டியை பார்ப்போர் இதயங்கள் தடதடவென துடித்துக் கொண்டிருந்த போதிலும் லிரெனும், குகேசும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் போட்டியை தொடர்ந்தனர். காய் நகர்த்தல்களின் எண்ணிக்கை 40 தாண்டியபோது, அந்த இறுதிப் போட்டி டிராவில் முடியும் என்றே அனைவரும் எண்ணினர். 50 நகர்த்தல்கள் முடிந்தபோதும், அந்த எண்ணம் மேலும் வலுப்பெற்று, ‘போட்டி டிராவில் முடிந்தால் அடுத்து நடக்கும் டைபிரேக்கர் போட்டியில் வெல்லப்போவது யார்?’ என, பார்வையாளர்கள் யூக கேள்விகளை எழுப்பத் துவங்கி விட்டனர். 54வது நகர்த்தல் முடிந்த நிலையில் 55வது நகர்த்தலாக லிரென், தன் யானையை தவறான இடத்தில் வைத்த சில நொடிகளில், மகா தவறு செய்து விட்டதை உணர்ந்து தன்னைத் தானே நொந்து கொண்டு தலை கவிழ்ந்தார். அதுவரை எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த குகேஷின் முகத்தில் ஆயிரம் தாமரை மொட்டுகள் மலர்ந்தன. உள்ளத்தில் பல்லாயிரம் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்து பறக்கத் துவங்கின.
இத்தனை நேரம் அவர் எதிர்பார்த்து காத்திருந்த தவறை லிரென் செய்தே விட்டார் என்பதை புரிந்து கொண்ட குகேஷ் முகத்தில் மகிழ்ச்சி கொப்பளிக்க தலை நிமிர்ந்தார். தன் ஏழாண்டு கனவை நிறைவேற்றும் வகையில், ஆட்டத்தின் 58வது நகர்த்தலில் லிரெனை வெற்றி வாகை சூடினார் குகேஷ். அந்த வெற்றியால் உள்ளத்தில் மகிழ்ச்சி பிரவாகமாகி ஊற்றெடுக்க கண்கள் ஆனந்த கண்ணீரை உகுக்க துவங்கின. அவர் இயல்பு நிலைக்கு வர சில நிமிடங்கள் உருண்டோட வேண்டியிருந்தது. அதன் பின்பே இருக்கையில் இருந்து எழுந்து இரு கரங்களை உயர்த்தி வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடினார் குகேஷ். அந்த வெற்றி, 140 கோடி இந்தியர்களின் நீண்ட நாள் கனவை, விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் 2வது முறையாக மீண்டும் நிறைவேற்றுவதாக அமைந்திருந்தது. குகேஷின் வெற்றியால் தமிழ்நாடும், இந்தியாவும் பெருமை கொள்கிறது.
செஸ் போட்டிகளின் தலைநகர் சென்னை
செஸ் உலகில் இந்தியா இதுவரை, 84 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. அவர்களில் 29 பேரை உருவாக்கி, செஸ் அரங்கில் தனக்கென உன்னதமான தனியொரு இடத்தை பெற்றுத் திகழ்கிறது தமிழ்நாடு. இவர்களில் பெரும்பாலானோரின் பயிற்சிக் களமாக சென்னையே உள்ளது. நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டியை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களும் தீவிரம் காட்டி வரும் நிலையில், வளரும் பருவத்தில் உள்ள சிறுவர், சிறுமியரின் அறிவுப்பசியை துாண்டும் வகையிலான செஸ் போட்டிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் தந்து தேவையான உதவிகளை அளித்து ஊக்குவித்து வருகிறது. இதனால், இந்தியாவை பொறுத்தவரை செஸ் போட்டிகளின் தலைநகராக சென்னை திகழ்கிறது.
கடந்த 2022ல் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தும் உரிமையை ரஷ்யா இழந்தபோது, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் உதவியுடன் அந்த போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டி, தமிழ்நாடு அரசு அரிய சாதனை படைத்தது. வரலாற்று சிறப்பு வாய்ந்த மாமல்லபுரத்தில் அந்த போட்டிகள் அனைவரும் பாராட்டும் வகையில் அரங்கேறின. இத்தகைய போட்டிகள், வளரும் இளைய தலைமுறையினர் மத்தியில் செஸ் போட்டிக்கு பெரியளவில் வரவேற்பை உருவாக்கி தந்துள்ளன.
The post 7 வயதில் துவங்கிய பயணம்…18 வயதில் சூடினார் மணிமகுடம்: சதுரங்கப் பேரரசின் இளவரசர் குகேஷ் appeared first on Dinakaran.