காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழையால் 533 ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும் 199 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது. தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் என பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தொடர் மழையால் 533 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி உள்ளிட்ட 128 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளைபட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபதூர் ஏரி, விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கள் தாங்கள், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி என செங்கல்பட்டு மாவட்டத்தில் 405 ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 128 ஏரிகள் என மொத்தம் 533 ஏரிகள் நிரம்பியள்ளன.
இந்தநிலையில் மிகப்பெரிய ஏரிகளான விவசாயத்திற்கும், நீர் ஆதாரத்துக்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய ஏரிகளில் முக்கிய ஏரிகள் வேகமாக நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 115 ஏரிகள் 75 சதவீதமும், 6 ஏரிகள் 50 சதவீதமும், 2 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் 84 ஏரிகள் 75 சதவீதமும், 127 ஏரிகள் 50 சதவீதமும், 41 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2,550 கன அடியாக குறைவு
மழை நின்றதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்தும் கணிசமாக குறையத் தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரிக்கு வரும் நீர்வரத்து 2,550 கனஅடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 24 அடியில், தற்போது 22.70 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. ஆனால், ஏரியில் இருந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 4,632 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று பிற்பகல் 12 மணிக்கு 6 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. பொதுவாக ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டும் போதுதான், பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையிலேயே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருவதாக ஏரியை பாதுகாத்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்வது குறைந்து, ஏரிக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்தால் மட்டுமே, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும், நேற்று ஏரியில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், திருமுடிவாக்கம், அனகாபுத்தூர், பம்மல் மற்றும் பொழிச்சலூர் ஆகிய அடையாறு ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், தொடர்ந்து பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மழை நின்ற போதிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரவு, பகலாக 24 மணி நேரமும் ஏரியை கண்காணித்து வருகின்றனர்.
The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழையால் 533 ஏரிகள் நிரம்பின: 199 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீர் appeared first on Dinakaran.