எப்போதும் தன் மனதில் பட்டதை பேசிவிட கூடிய பண்புக்கு சொந்தக்காரர். அவரது அன்பு மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா.வை இழந்ததில் இருந்தே மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார். எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கவலைகளை மீறி மக்கள் பணியாற்றி வந்தார். என்னை எப்போது சந்திக்க வந்தாலும், “உடம்ப பாத்துக்கோங்க’’ என்று அவர் அக்கறையுடன் சொல்ல தவறியதே இல்லை.
அவ்வாறு அவர் அன்பொழுக சொல்லும்போதெல்லாம் “நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க” என நானும் அவரிடம் சொல்வேன். அதற்கு அவர், “நீங்கள் என்னிடம் ஒப்படைத்த மக்கள் பணியை ஏற்ற பிறகு இன்னும் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். நலமாக இருக்கிறேன்” என்று உற்சாகம் ததும்ப கூறி என்னை சமாதானப்படுத்துவார். சட்டமன்றத்தில் சந்திக்கும்போதும், நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களை குறிப்பிட்டு அவற்றுக்கு மக்களிடையே உள்ள ஆதரவையும் தெரிவித்து பாராட்டுவார்.
அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனைக்கு போகும் நிலையிலும் தனது துணைவியாரிடம், என்னை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதையறிந்து அவரை நான் சந்தித்தபோது, அவர் பேசும் நிலையில் இல்லை. இருந்தபோதும் அவர் என்னிடம் என்ன சொல்ல நினைத்தார் என்பதை உணர்ந்தவனாகவே இருந்தேன். அவரது மகனையும், மருத்துவர்களையும் தொடர்புகொண்டு, அவரது உடல்நலன் குறித்த தகவல்களை அவ்வப்போது அறிந்து வந்தேன். இந்நிலையில், இன்று காலை அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்ட செய்தியும் அதனை தொடர்ந்து அவர் மறைவுற்றார் என்ற செய்தியும் வந்தடைந்தது.
அவரது மறைவு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகள் தமிழ்நாடு அரசியலில் முன்னணி தலைவராக விளங்கி, நீண்டகாலம் மக்கள் பணியாற்றிய அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
* வெளிப்படையாக பேசும் ஆற்றலுக்கு சொந்தக்காரர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் எதையுமே வெளிப்படையாக பேசும் ஆற்றலுக்கு சொந்தக்காரர் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:
காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறோம். பெரியாரின் பேரன், கலைஞர் மீது மாறா பற்று கொண்டவர். எதையுமே வெளிப்படையாக பேசும் ஆற்றலுக்கு சொந்தக்காரர். நம்முடைய அரசியல் பயணத்தில் வழிகாட்டி ஊக்குவித்த பண்பாளர்.
இதுதவிர, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பை பெற்றோம். அதேபோல, ஈரோட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த அரசு நிகழ்ச்சியில், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் முன்னெடுப்பில் பெரியாரின் பூர்வீக இடத்துக்கான பட்டாவை அவரிடம் வழங்கிய போது, அதற்காக தமிழ்நாடு அரசையும், முதல்வரையும் நம்மையும் அவர் வாழ்த்தி பேசியது இன்றும் நம் மனதில் நிழலாடுகிறது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள் – காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
The post அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இளங்கோவன் மறைவு வேதனையை ஏற்படுத்துகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம் appeared first on Dinakaran.