*போக்குவரத்து பாதிப்பு
சேந்தமங்கலம் : கொல்லிமலை மலைப்பாதையில் தொடர் மழை காரணமாக 8 இடங்களில் மண் சரிந்து, மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொல்லிமலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், நேற்று காலை நரியங்காட்டில் முள்ளுக்குறிச்சி செல்லும் மாற்று வழி சாலையில் சோதனை சாவடி அடுத்து, தொடர்ச்சியாக 3 இடங்களில் பாறைகள் சாலையில் விழுந்தும், மண்சரிவும் ஏற்பட்டது.
அடிவாரம் காரவள்ளியில் இருந்து முதல் 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாதையில் 16, 21, 62 ஆகிய கொண்டை ஊசி வளைவுகள், அறப்பளீஸ்வரர் கோயில் செல்லும் சாலையில் பெரிய கோவிலூர், ஓலையாறு உள்ளிட்ட 5 இடத்திலும் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதுகுறித்து உடனடியாக நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையில் இளநிலை பொறியாளர் சுப்பிரமணி, பணியாளர்கள் விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
பொக்லைன் மூலம் சாலையில் சரிந்துள்ள மண், கற்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் ஆங்காங்கே சில இடங்களில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மரங்கள் வேரோடு சாயும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மரத்தின் அருகில் நிற்க வேண்டாம், வாகனங்களை மரத்துக்கு அடியில் நிறுத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மேடு தீயணைப்பு நிலையத்தில் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The post கொல்லிமலை மலைப்பாதையில் 8 இடங்களில் மண்சரிவு மரங்கள் வேரோடு சாய்ந்தது appeared first on Dinakaran.