பொள்ளாச்சி : தொடர்ந்து பெய்த மழையால் ஆழியாற்றில் தண்ணீர் கலங்கி வருவதால், பொள்ளாச்சி பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரை மக்கள் காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் நகராட்சி மற்றும் கிராம புறங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் சேமித்து குடியிருப்பு பகுதிகளுக்கு திறக்கப்படுகிறது. அவ்வப்போது வடகிழக்கு பருவமழை பெய்வதால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாலும், சிலநேத்தில் கலங்கியபடி வருகிறது.
இதில், நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ந்து விடிய, விடிய பெய்த மழையால், ஆழியாற்றில் தண்ணீர் கலங்கியபடி வந்தது. இதனால், பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கி மாசுப்படிந்து வருகிறது அதனை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு தலைமை நீரேற்று நிலையத்தில் படிகாரம் போட்டு சுத்தம் செய்து கிருமி நாசினிக்காக குளோரினேசன் செய்யப்படுகிறது. மேல்நிலைத்தொட்டிகளில் சேமித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், குடிநீர் வினியோகம் திட்டத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள ஆழியாற்றில், அவ்வப்போது பெய்யும் பருவ மழையால் நீர்வரத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி சிலநேரத்தில் கலங்கியபடி வருகிறது. எனவே, நகர் பகுதியில் உள்ள மேல் நிலை தொட்டியிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படும் குடிநீரை, காய்ச்சிக்குடிக்க வேண்டும்’ என்றனர்.
The post தொடர் மழை எதிரொலி ஆழியாற்றில் கலங்கி வரும் தண்ணீர் காய்ச்சி குடிக்க அதிகாரிகள் அறிவுரை appeared first on Dinakaran.