குன்னூர் : குன்னூர் அருகே கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை கூட்டத்தை நுழைய விடாமல் வனத்துறையினர் விரட்டியடித்தனர். இதனால், பரபரப்பு நிலவியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக வனப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள் ஆகியவைகள் பசுமையாக காட்சியளித்து வரும் நிலையில், யானைகளுக்கு போதுமான உணவுகள் கிடைத்து வருகின்றன. இதனால், சமவெளி பகுதிகளில் உள்ள யானைகள் மலைப்பகுதிகளை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில், குன்னூர் அருகே கொலக்கம்பை கிராமத்தில் கெத்தை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் வனப்பகுதியிலும், இரவில் குடியிருப்பு பகுதிகளிலும் யானைகள் தொடர்ந்து இடம் மாறி, மாறி முகாமிட்டு வருவதால், பொதுமக்கள் தொடர்ந்து அச்சமடைந்து வருகின்றனர்.
இதனிடையே கொலக்கம்பை பகுதியில் மேரக்காய் தோட்டத்தில் புகுந்து, மேரக்காய் பந்தல்கள் மற்றும் மேரக்காய்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை நேரத்தில் கிராமத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானை கூட்டத்தை குன்னூர் வனசரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கிராமத்திற்கு நுழையாதவாறு பட்டாசுகள் வெடித்தும், நெருப்பு மூட்டியும் தடுத்து விரட்டி அடித்தனர்.
மேலும், காட்டு யானைகள் அருகேயுள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால், அந்த பகுதியில தேயிலை பறிக்க தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர்ந்து, யானைகளை கண்காணிக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
The post குன்னூர் அருகே பரபரப்பு கிராம குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற யானை கூட்டம் appeared first on Dinakaran.