55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

சென்னை: வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என 55வது ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நேற்று நடந்த 55வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் அதிக விலையைக் கருத்தில் கொண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுச்சுமையை குறைக்க மரபணு சிகிச்சை (கார்-டி செல் சிகிச்சை) மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவிகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாகக் குறைப்பதற்கான முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மேலும் இணக்க முறையில் வரி செலுத்தும் வணிகர்களின் வணிக இடங்களின் வாடகை மீது எதிரிடை கட்டண முறையில் வரி செலுத்துவதில் இருந்து விலக்களிப்பதற்கான முன்மொழிவுக்கும் அமைச்சர் ஆதரவு தெரிவித்தார்.
பதிவு செய்யாத நபர்களுக்கு இணைய வழி சேவைகள் வழங்குகைகளின் சரியான மாநிலத்தை குறிப்பிடுவதை தெளிவுபடுத்துவதற்கான சுற்றறிக்கையை திறம்பட செயல்படுத்த மேலாண்மை தகவல் தரவு அறிக்கைகளை உருவாக்கி அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நித், வணிகவரி ஆணையர் ஜகந்நாதன் மற்றும் வணிகவரித் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post 55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: