கோத்தகிரி பகுதியில் மேக மூட்டம், சாரல் மழை

கோத்தகிரி : கோத்தகிரியில் இருந்து குன்னூர் – உதகை செல்லும் நெடுஞ்சாலையில் மலைப்பாதையில் சாரல் மழையால் பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு, வாகனங்களை இயக்கினர்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் உதகை, குன்னூர், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் உதகை, குன்னூர், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை முதலே கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழை, மேக மூட்டம் காரணமாக கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெஸ்ட் புரூக், கட்டபெட்டு, பாக்கிய நகர், அம்பேத்கர் நகர், பேரார், மைனலை உள்ளிட்ட பகுதிகளில் மேக மூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் கோத்தகிரி, உதகை, குன்னூர் செல்லக்கூடிய மலைப்பாதையில் சாலைகளில் மேக மூட்டம் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்ள வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவி வரும் நிலையில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சாலையோர வியாபாரிகள் கடும் குளிரில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

The post கோத்தகிரி பகுதியில் மேக மூட்டம், சாரல் மழை appeared first on Dinakaran.

Related Stories: