சென்னை: தமிழ்நாட்டில் 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.12 கோடியே 38 லட்சம் நிதி ஒதுக்கி ஆணையிட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறியதாவது: 2024-2025ம் ஆண்டின் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின்படி தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் புதிய நவீன ஆய்வகங்களை அமைப்பதற்காக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கியுள்ளார்.
மாணவர்கள், பொருட்களின் இணைய பயன்பாடுகள் மற்றும் பிற மேம்பட்ட உட்பொதிக்கப்பட்ட அமைப்பு அடிப்படையிலான திட்டத்தை உருவாக்க காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூரில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணைய ஆய்வகம் (Internet of Things Laboratory) அமைக்க தலா ரூ.92 லட்சத்து 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 84 லட்சத்த்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருள்சேர் உற்பத்தி ஆய்வகம் அமைக்க தலா ரூ.1 கோடியே 16 லட்சம் வீதம், மொத்தம் ரூ.3 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், சேலம் மற்றும் பர்கூரில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் ஆய்வகம் அமைக்க தலா ரூ.1 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரத்து 975 வீதம் மொத்தம் ரூ.3 கோடியே 95 லட்சத்து 63 ஆயிரத்து 926 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க தலா ரூ.1கோடியே 3 லட்சத்து 33 ஆயிரத்து 910 வீதம், மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சத்து 1,730 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் அப்பகுதியில் உள்ள மாணவர்களின் தேவையினை பூர்த்தி செய்ய இந்த புதிய நவீன ஆய்வகங்கள் அமையும். இவற்றை அமைக்க மொத்தம் ரூ.12 கோடியே 38 லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்கள் அமைக்க ரூ.12.38 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.