- பரோடா
- மும்பை
- தில்லி
- பெங்களூரு
- சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்
- இந்தியா
- விதர்பா
- மத்தியப் பிரதேசம்
- செளராஷ்டிராவின்
- வங்கம்
- உத்திரப்பிரதேசம்
- தின மலர்
பெங்களூரு: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 லீக் போட்டிகள் நடந்து வந்தன. இதில், மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்தியப்பிரதேசம், சவுராஷ்டிரா, பெங்கால், உத்தரப்பிரதேசம் ஆகிய எட்டு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.முதல் காலிறுதிப் போட்டி, மத்தியப்பிரதேசம் – சவுராஷ்டிரா அணிகள் இடையே, கர்நாடகாவின் ஆலுாரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மத்தியப்பிரதேசம் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய மத்தியப்பிரதேசம் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 33 பந்தில் 38 ரன் குவித்து, 2 விக்கெட்டும் வீழ்த்திய ம.பி.யின் வெங்கடேஷ் ஐயர் ஆட்ட நாயகன்.
பெங்களூருவில் நடந்த மற்றொரு காலிறுதியில் பரோடா- பெங்கால் அணிகள் மோதின. முதலில் ஆடிய பரோடா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. பின் பேட்டிங் செய்த பெங்கால் அணி 18 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன் மட்டுமே எடுத்து, 41 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பரோடா அரை இறுதிக்கு தகுதி பெற்றது. பரோடாவின் லுக்மன் மெரிவாலா ஆட்ட நாயகன்.ஆலுாரில் நடந்த 3வது காலிறுதியில் விதர்பா – மும்பை அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய விதர்பா அணி அபாரமாக ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்தது.
இதையடுத்து, 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை களமிறங்கியது. துவக்க வீரர்கள் பிருத்வி ஷா 49, அஜிங்க்யா ரஹானே 84 ரன் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். 19.2 ஓவர் முடிவில், மும்பை அணி 4 விக்கெட் இழந்து 224 ரன் குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், மும்பையும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 84 ரன் குவித்த ரஹானே ஆட்ட நாயகன்.பெங்களூருவில் நடந்த 4வது காலிறுதியில் டெல்லி, உத்தரப்பிரதேச அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்தது. பின்னர், 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. களமிறங்கியது. துவக்கம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய உ.பி. வீரர்கள், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். 19 ரன் வித்தியாசத்தில் வென்ற டெல்லி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகன் அனுஜ் ராவத். அரை இறுதிப் போட்டிகள் பெங்களூருவில் நாளை நடக்கின்றன. முதல் அரையிறுதியில் பரோடா – மும்பை அணிகள், 2வது அரை இறுதியில் டெல்லி – ம.பி., அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி 15ம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ளது.
The post ம.பி., பரோடா, மும்பை, டெல்லி அசத்தல் வெற்றி: உறுதி ஆனது அரையிறுதி appeared first on Dinakaran.