×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்; பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியாவும், அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றிபெற்ற நிலையில் 3வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்காக நேற்று பிரிஸ்பேன் வந்தடைந்த இந்திய அணியினர் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது வீரர்கள் மத்தியில் கேப்டன் ரோகித்சர்மாவுக்கு பதிலாக விராட் கோஹ்லி உரையாற்றினார்.

எப்போதும் வீரர்கள் மத்தியில் கேப்டன் தான் ஆலோசனை வழங்கி பேசுவார். ஆனால் வித்தியாசமாக இன்றைய பயிற்சியின் போது கோஹ்லி ஆலோசனைகளை வழங்கினார். 1-1 என டெஸ்ட் தொடர் சமனில் உள்ள நிலையில் பிரின்ஸ்பேனில் வெற்றிபெற்று முன்னிலை பெறும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. அடிலெய்டில் இந்திய வீரர்களின் மோசமான பேட்டிங்கால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்கு தகுதிபெற வேண்டுமெனில் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

மழை அச்சுறுத்தல்: இதனிடையே பிரிஸ்பேனில் அடுத்த 5 நாட்களும் மழை அச்சுறுத்தல் உள்ளது. முதல்நாளில் 50 சதவீதம், 2வது மற்றும் 3வது நாட்களில் 40 சதவீதம், 4வது நாளில் 30, 5வது நாளில் 40 சதவீதம் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷா, பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை நேரில் காண உள்ளார்.

குறைந்தபட்சம் 350 ரன் அடிக்க வேண்டும்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூஹெய்டன் அளித்துள்ள பேட்டி: பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய வீரர்கள் பந்து வீசும்போது 4வது, 5வது ஸ்டெம்ப்ட் லைனில் பந்துவீச வேண்டும். பவுன்சை இந்திய வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிங்க் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும். அதில் அவர்கள் எளிதில் வென்றுவிட்டார்கள். ஆனால் சிவப்பு பந்தில் 2 அணிக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருக்கும். இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக பேட் செய்யவேண்டும். ஒரே நாளில் ஆல் அவுட் ஆவதை ஏற்றுக் கொள்ள முடியாது. குறைந்தபட்சம் 350 ரன் தாண்டி எடுக்கவேண்டும். பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருந்தாலும் டாஸ் வென்றால் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். கடந்த முறை இங்கு இந்தியா சிறப்பான வெற்றியை பெற்றது. அதன் நல்ல நினைவுகள் நிச்சயம் உதவும் என நம்புகிறேன், என்றார்.

The post ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்; பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Australia ,Brisbane ,Audi ,Border-Kawasaki Trophy ,India ,Perth ,Adelaide ,Dinakaran ,
× RELATED ஆஸியுடன் 3வது டெஸ்ட்டில் புதிய சாதனை...