×

ஆஸியுடன் 3வது டெஸ்ட்டில் புதிய சாதனை படைப்பார்களா: ரிஷப் பண்ட், சிராஜுக்கு வாய்ப்பு

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடக்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட், முகம்மது சிராஜ் புதிய சாதனைகள் படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த இரு டெஸ்ட்களில் தலா ஒரு வெற்றி பெற்று இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இந்நிலையில் வரும் 14ம் தேதி பிரிஸ்பேனில் காபா மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நடக்கிறது.

காபா மைதானத்தில் ஆஸி அணியை இந்திய அணி ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2021ல் காபா மைதானத்தில் நடந்த போட்டியின்போது, இந்திய விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் அவுட்டாகாமல் 89 ரன் எடுத்து முதல் வெற்றியை அணிக்கு பெற்று தந்தார். இந்த மைதானத்தில் இதுவரை, 112 ரன்களை அவர் எடுத்துள்ளார். காபாவில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராக மோத்கன்ஹல்லி லஷ்மிநரசு உள்ளார். அவர், காபாவில் 175 ரன் எடுத்துள்ளார். அந்த சாதனையை முறியடிக்க பண்ட்டுக்கு இன்னும் 63 ரன்களே தேவை.

அதேபோல், காபாவில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை, 2 போட்டிகளில் 8 விக்கெட்டுகளுடன் எரபள்ளி பிரசன்னா படைத்துள்ளார். ஷர்துல் தாக்குர் 7 விக்கெட் எடுத்துள்ளார். பிரசன்னாவின் சாதனையை முறியடிக்க இந்திய பந்து வீச்சாளர் முகம்மது சிராஜுக்கு இன்னும் 3 விக்கெட்டுகளே தேவை. காபாவில் ரிஷப் பண்ட்டும், சிராஜும் புதிய சாதனை படைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

The post ஆஸியுடன் 3வது டெஸ்ட்டில் புதிய சாதனை படைப்பார்களா: ரிஷப் பண்ட், சிராஜுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Rishabh Pant ,Siraj ,Brisbane ,Mohammed Siraj ,Gaba Stadium ,Brisbane, Australia ,Rohit Sharma ,Aussie ,Aussies ,Dinakaran ,
× RELATED ரிஷப் பன்டுக்கு வாழ்த்து சொன்ன நடிகை: சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விவாதம்