பெர்த்: இந்தியாவுடனான 3வது மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸி அணி அபாரமாக ஆடி 83 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. இம்மாதம் 5ம் தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 8ம் தேதி நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் 122 ரன் வித்தியாசத்திலும் ஆஸி மகளிர் அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டி பெர்த் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸியின் துவக்க வீராங்கனைகள் போப் லிட்ச்பீல்ட் 25, ஜார்ஜியா வோல் 26 ரன் எடுத்து அவுட்டாகினர். அன்னபெல் சுதர்லேண்ட் 95 பந்துகளில் 110, ஆஸ்லே கார்ட்னர் 50, கேப்டன் தஹிலா மெக்ராத் அவுட்டாகாமல் 56 ரன் குவித்தனர். இதனால், 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு ஆஸி. 298 ரன் எடுத்தது.
இதையடுத்து 299 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய மகளிர் களமிறங்கினர்.
துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி 109 பந்துகளில் 105 ரன் குவித்தார். இருப்பினும் பின் வந்தோர் சிறப்பாக ஆடத் தவறினர். இதனால், 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 215 ரன் மட்டுமே எடுத்து 83 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸியின் ஆஸ்லே கார்ட்னர் 30 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியை அடுத்து, 3-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரை கைப்பற்றி உள்ளது. ஆஸியின் அன்னபெல் சுதர்லேண்ட், ஆட்ட நாயகியாகவும், தொடர் நாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
The post இந்திய மகளிர் அணியுடன் ஓடிஐ தொடர் ஒயிட் வாஷ் ஆக்கிய ஆஸி: 3வது போட்டியிலும் அபார வெற்றி appeared first on Dinakaran.