மாநிலங்களவையை பாரபட்சமாக நடத்துவதாக குற்றச்சாட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்

புதுடெல்லி: பாரபட்சமாக மாநிலங்களவையை நடத்துவதால் அவையின் தலைவரான துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை கொடுத்துள்ளனர். மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் அவையை பாரபட்சமாக நடத்துவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக எதிர்க்கட்சி எம்பிக்களை பேச அனுமதிக்காத அவர், ஆளும்தரப்பு எம்பிக்கள் எந்த பிரச்னையை எழுப்பினாலும் விதிகளை மீறி பேச அனுமதிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலும் கூட, தொழிலதிபர் அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிக்காத அவைத்தலைவர் தன்கர், காங்கிரஸ், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் இடையே தொடர்பு இருப்பதாக ஆளுங்கட்சியினர் குற்றம்சாட்டியதும் அது குறித்து மட்டும் பேச அனுமதித்தது சர்ச்சையானது.

இந்நிலையில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 67(பி)ன் கீழ், துணை ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி, மாநிலங்களவையில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை கொடுத்துள்ளன. இந்த நோட்டீசை காங்கிரஸ் எம்பிக்கள் ஜெய்ராம் ரமேஷ், நசீர் உசேன் ஆகியோர் மாநிலங்களவை பொதுச்செயலாளர் பிசி மோடியிடம் சமர்ப்பித்தனர். இதில், காங்கிரஸ், , திமுக, ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஐ-எம், ஜேஎம்எம், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 60 எதிர்க்கட்சி எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் நோட்டீசில் கையெழுத்திடவில்லை. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் மழைக்கால கூட்டத் தொடரின் போதே தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பின்னர் அதை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மாநிலங்களவையை பாரபட்சமாக நடத்தி வருவதால், அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்பிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இது மிகவும் வேதனையான முடிவு. ஆனால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நலன்களுக்காக அவர்கள் இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது’’ என்றார்.

மாநிலங்களவையின் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் துணை ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும். ஆனால், தீர்மானம் கொண்டு வர 14 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் தரப்பட வேண்டும். இந்த தீர்மானம் மாநிலங்களவை, மக்களவை இரண்டிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதற்கான பலம் எதிர்க்கட்சிகளிடம் இல்லாததால் இந்த தீர்மானம் தோல்வி அடைவது உறுதி. இது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகரிகா கோஷ் கூறுகையில், ‘‘துணை ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை எங்களிடம் இல்லை. ஆனால் இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காக போராடுவதற்கான வலுவான செய்தி. இது தனிநபருக்கு எதிரான போராட்டம் அல்ல, அரசமைப்புக்கான போராட்டம்’’ என்றார்.

* ரூ.23,000 கோடி லஞ்சம் கொடுத்த அதானி காங்கிரஸ் பகீர் புகார்

அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுடன் காங்கிரஸ் கட்சியை தொடர்புபடுத்தி பாஜ எம்பிக்கள் நேற்றும் மக்களவை, மாநிலங்களவையில் பேசினர். மாநிலங்களவையில் ஆளுங்கட்சியின் மாநிலங்களவை தலைவரான ஜே.பி.நட்டா இவ்விவகாரத்தை குறிப்பிட்டு பேசினார். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியின் அவைத் துணைத்தலைவர் பிரமோத் திவாரி, அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.23,000 கோடி லஞ்சம் கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் இரு கட்சி எம்பிக்கள் இடையே அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை, மக்களவை இரண்டுமே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

* வணிக கப்பல் மசோதா தாக்கல்

மக்களவையில் கடும் அமளிக்கு இடையே, ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால், வணிக கப்பல் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா வணிக கப்பல் சட்டம் 1958ஐ ரத்து செய்து, இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்ய சமகால, எதிர்கால மற்றும் ஆற்றல்மிக்க சட்டங்களை உறுதி செய்வதாக அமைச்சர் சோனோவால் குறிப்பிட்டார். மேலும், வணிகக் கப்பல்களின் தகுதி வரம்புகளை விரிவுபடுத்துவதோடு, கடல்சார் உயிரிழப்புகள் குறித்து விசாரணை மற்றும் இழப்பீடுகள் வழங்குவதற்கான அம்சங்களை கொண்டுள்ளது.

The post மாநிலங்களவையை பாரபட்சமாக நடத்துவதாக குற்றச்சாட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: